எம்.ரீ.எம்.பாரிஸ்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச்செயலாளர் யு.எல்.எம்.என்.முபின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
இன்று (21/08/2024) கொழும்பில் ஜனாதிபதியைச் சந்தித்த தேசிய கொள்கை பரப்புச்செயலாளர் முபீன் தலைமையிலான குழுவினர் தமது ஆதரவை ஜனாதிபதிக்குத் தெரிவித்தனர்.
வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த மேற்படி குழுவினர், அவற்றுக்கான தீர்வைப்பெற்றுத் தருமாறு எழுத்து மூலமாக மகஜரை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
மேற்படி மகஜரில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வின் போது வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் மற்றும் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு உரிய அடிப்படையிலான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
அத்தோடு, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக மோசமாக காணிப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் முஸ்லிம்களுக்கு உரிய அவர்களின் இன விகிதசார அளவுக்கேற்ப காணிப்பங்கீடு வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் பல்வேறு தகுதியான முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள் இருந்த போதும், அம்பாறை, திருவோணமலை மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சூழ்நிலையில் இதுவரையில் முஸ்லிம் அரசாங்க அதிபர்கள் ஒருவரும் நியமிக்கப்படவில்லை.
அத்தோடு, முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்திலிருந்து மாகாண ஆளுநர் நியமிக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த மேற்படி குழுவினர் எதிர்காலத்தில் பொருத்தமான முஸ்லிம் சமூகத்திலிருந்து தகுதியானவர்களை இத்தகைய பதவி நிலைகளுக்கு நியமிக்க வேண்டுமென்றும்.
மேலும், வடக்கு மாகாணத்திலிருந்து 1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இதுவரையில் முறைப்படியான மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் 80க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் கடந்த யுத்த காலத்தில் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டன. அக்கிராமங்களுக்கான மீள்குடியேற்றமும் உரிய முறைப்படி நடைபெறவில்லை.
எனவே, ஜனாதிபதியாகத்தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இதற்கென ஜனாதிபதி விசேட செயலணியொன்றை அமைத்து மேற்படி மீள்குடியேற்றத்தை செய்து தர வேண்டும்.
அத்தோடு, 1999ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான பிரதேச செயலகமான கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் இதுவரையில் உரிய பிரதேசத்திற்குரிய காணி அமைப்போடு இயங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய குழுவினர் அதற்கான அமைச்சரவைத்தீர்மானம் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
காத்தான்குடியின் எல்லைப்பிரச்சினைகள் தொடர்பில் தெளிவான மூன்று அரசாங்க வர்த்தமானி இருந்தும் காத்தான்குடியின் எல்லைகள் தீர்த்து வைக்கப்படவில்லை. வர்த்தமானி உள்ளபடி அதனை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலே 1999ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிரான் கோரளை தெற்கு பிரதேச செயலகத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கென காணியைக்கொண்டிருந்த கோரளை மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து 155 சதுர கிலோ மீட்டர் காணி எடுக்கப்பட்டு, அது கிரான் பிரதேச செயலகத்தோடு இணைக்கப்பட்டதால் ஓட்டமாவடி மக்கள் பாரிய காணிப்பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
எனவே, அந்த 155 சதுர கிலோ மீட்டர் காணியை மீண்டும் ஓட்டமாவடி மேற்கு கோரளை மேற்கு பிரதேச செயலகத்தோடு இணைக்க வேண்டும்.
ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4, 5ம் குறிச்சி, எல்லை நகர் கிராமங்கள் 1999ம் ஆண்டு யுத்த நிலைமையின் போது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தோடு தற்காலிகமாக இணைக்கப்பட்டதோடு, அது இதுவரை மீண்டும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தோடு இணைக்கப்படவில்லை. அதனால் அம்மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.
அதேபோன்று, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தோடு இயங்குகின்ற ஐயங்கேணி, மீராகேணி, மிச் நகர் போன்ற கிராமங்கள் ஏராவூர் நகர பிரதேச செயலக நிர்வாகத்தினால் முழுமையாக நிர்வாகம் செய்யப்படாமல் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம் அதில் தலையீடுகளை மேற்கொள்கிறது. அதனை முழுமையாக ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தோடு இணைக்க வேண்டும்.
காத்தான்குடிக்கான கழிவுநீர் முகாமைத்திட்டம் தென் கிழக்கு ஆசியாவிலேயே மிக அதிகமான சனத்தொகையை கொண்ட நகரங்களில் ஒன்றான காத்தான்குடிக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கிற உங்களால் அமைச்சரவைப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும், இதுவரை கழிவுநீர் முகமைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை. அதனை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
கடந்த 2022, 2023ம் ஆண்டு காலப்பகுதியில் காத்தான்குடியில் வருடாந்தம் ஏற்படும் வெள்ளத்தின் காரணமாக 40 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, காத்தான்குடிக்கான வெள்ளத் தடுப்புத்திட்டமொன்றை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
அத்தோடு, புதிய காத்தன்குடியில் மிக அதிகமாக மக்கள் பல்வேறு காணிப்பிரச்சினைகளை நிர்வாக ரீதியாக எதிர்நோக்குகிறனர். காத்தான்குடி பிரதேசம் நகர் சபையாக தரமுயர்த்தப்பட்ட போது அக்காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை.
அதனால் தற்போது மக்கள் காணி உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது. மேற்படி பிரச்சினையைத்தீர்த்து வைப்பதற்காக புதிய காத்தான்குடிக்கான பிரதேச சபையொன்றை உருவாக்கித் பிரகடனப்படுத்துவதோடு, அப்பிரதேச சபையோடு பாலமுனை, பூனைச்சிமுனை, மஞ்சந்தொடுவாய், கர்பலா மற்றும் ஆரயம்பதி கிழக்கு போன்ற பிரதேசங்களை இணைத்து பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் எனவும் மகஜரில் மேற்படி குழுவினர் தெரிவித்து மகஜரை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளித்து , உடனடியாக இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரி விடுத்தனர்.
மேற்படி சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏசி அப்துல் காதர் அப்துல் லெத்தீப், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எச்.எம்.எம்.பாகிர், காத்தான்குடி நகர சபையின் மற்றுமொரு உறுப்பினர் டி.எம்.எம்.தௌபிக் ஜேபி, ஆரம்பதி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.அன்சார், பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.பி.எம்.பவ்ஸர் JP, பூனொச்சிமுனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எச்.எம்.எம்.அஸீஸ், மட்டக்களப்பு நகர மற்றும் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பாளர் எம்.வை.எம்.ஆதம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரயம்பதி பிரதேச செயலகப் பிரிவுக்கான இணைப்பாளர் யூ.எல்.மக்கீளின் உட்பட பலர் கலந்து கொண்டதோடு, ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதி செயலக பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத்தெரிவித்த ஜனாதிபதி,
மேற்படி முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் எதிர்காலத்தில் ஒரு புதிய கட்சியைத்தொடங்கி அதிலே முஸ்லிம் பிரிவொன்றை ஆரம்பித்து, முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை கையாள்வதற்கான முஸ்லிம் பிரிவொன்றை அமைத்து பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளதாகவும், நாட்டிலே முக்கியமாக இருக்கிற பொருளாதாரப்பிரச்சினைக்கு நிலையான திட்டமொன்றை உருவாக்கிச் செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய செயற்பாட்டாளர்களுக்கு விசேட நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, தனது தேர்தல் வெற்றிக்காக நீங்கள் செயற்படுவதையிட்டு தான் சந்தோஷமடைவதாகவும் தெரிவித்தார்.