கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி இரும்பு கம்பியால் தாக்கி கணவனை கொன்றுள்ளார்.
நேற்று (08) காலை தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உடகம்மெத்த, கோமகொட பிரதேசத்தில் வசித்து வந்த 62 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபரான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,
மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குந்திக்குளம் பகுதியில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் குந்திக்குளம், மிஹிந்தலை பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய கணவரும் 56 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோல கடந்த வெள்ளிக்கிழமை (6) இரவு கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது சம்பவம் இடம்பெற்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மிஹிந்தலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.