ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR) போசகர் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் அண்மையில் பாடசாலையின் பணிப்பாளர்கள் சபை மற்றும் பெற்றார் ஆசிரியர் சங்கத்துடன் சந்திப்பினை மேற்கொண்டு பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தியை மையப்படுத்தி செயற்திறன் மிக்க கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
குறித்த கலந்துரையாடலின் போது தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் என்ற வகையிலும் பாடசாலையின் போசகர் என்ற வகையிலும் சவுதி அரேபிய இராச்சியத்திற்கு வரவேற்ற பணிப்பாளர்கள் சபை கடந்த தசாப்தங்களில் தாம் மேற்கொண்டிருக்கின்ற முன்னேற்றச் செயற்பாடுகள் குறித்தும் பாடசாலை எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். பாடசாலையின் பெற்றார் ஆசிரியர் சங்கம் SLISRஇல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விச் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பில் தூதுவருடன் கலந்துரையாடியது.
இதன்போது கடந்த பல தசாப்தங்களாக ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலை மேற்கொண்டு வருகின்ற மேலான சேவைகளைப் பாராட்டிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் சவுதி அரேபியாவில் குடிபெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வலியுறுத்தினார். மேலும் தூதுவர் அவர்கள் SLISRஐ சவுதி அரேபியாவில் உள்ள "இலங்கையின் சொத்து" என்று அடையாளப்படுத்தியதுடன் எதிர்வரும் காலங்களில் பாடசாலையின் அபிவிருத்திக்கான தனது பூரண ஆதரவு கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்தார். மேலும் உலகெங்கும் பரவி வாழ்கின்ற SLISRன் பழைய மாணவர்களை மீள் இணைப்புச் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர் அவர்கள் பாடசாலையின் முன்னேற்றம் தொடர்பான முன்னெடுப்புகளுக்கு உதவும் விதத்தில் அவர்களை ஈடுபடுத்துவது தொடர்பிலும் கருத்துரைத்தார்.
ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலை (SLISR) சுயாதீனமானதும், இலாப நோக்கமற்றதுமான ஒரு சமூகப் பாடசாலையாக இருப்பதுடன் ரியாதிலுள்ள இலங்கைச் சமூகத்திற்கு மிகச் சிறந்த கல்வியை வழங்குகின்ற மத்திய தளமாகவும் திகழ்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை தூதுவராலயம்
ரியாத்
09.10.2024