பாறுக் ஷிஹான்.
கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானச்சாலை உள்ள நிலையில், மீண்டும் புதிதாக ஒரு மதுபானச்சாலை திறந்தமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து பொதுமக்கள் இணைந்து சவப்பெட்டி ஏந்தி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
இன்று ஆரம்பமான குறித்த போராட்டத்தில் குறித்த மதுபானச்சாலை பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்ததுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் கவனத்திற்கொள்ள வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
ஏற்கனவே ஒரு மதுபானச்சாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில், புதிதாக ஒரு மதுபானச்சாலை இங்கு அவசியமில்லையெனவும் சிறிய இக்கிராமத்திற்கு இரு மதுபானச்சாலை தேவையில்லையெனவும், இது எங்கள் சமூகத்தை சீரழிக்கவே ஆரம்பித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திற்குரித்தான உன்னிச்சை என்ற விலாசம் கொண்ட லேபல் பொறிக்கப்பட்ட மதுபானசாலையாக இது அம்பாரை மாவட்டத்தில் இயங்குவதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறித்த பிரதேசத்திற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வருகை தந்த நிலையில், குறித்த மதுபானச்சாலை உரிமையாளரிடம் தற்காலிகமாக மூடுமாறும் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறும் குறித்த மதுபானச்சாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரித்திணைக்களத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் உறுதியளித்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர் .