சவுதி அரேபியாவின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ளஜிசான் எகனாமிக் சிட்டியின் அருகே உள்ள அரம்கோ ரிஃபைனரி சாலையில் நடந்த விபத்தில் இந்தியரகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 9 பேர் இந்தியர்கள். 3 பேர் நேபாளத்தையும், 3 பேர் கானாவையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். உயிரிழந்த நபர்களில் கேரளா மாநிலம் கொல்லம் கேரளாபுரத்தைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத்(31) என்ற இளைஞரும் அடங்குவர்.
ஜுபைலில் இயங்கி வரும் ஏசிஐசி சர்வீசஸ் நிறுவனத்தின் ஜிசான் அராம்கோ திட்டத்திற்கான பிரிவல் வேலை செய்துவந்த 26 ஊழியர்களை ஏற்றிச் சென்ற மினி வேன் மீது எதிரே வந்த டிரெய்லர் பயங்கரமான மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வாகனம் முற்றிலுமாக உருக்குலைந்து போனது. இந்த விபத்தில் இறந்த மற்ற இந்தியர்கள் மகேஷ் சந்திரா, முசாபர் ஹுசைன் கான் இம்ரான், புஷ்கர் சிங் தாமி, ஸ்க்லைன் ஹைதர், தாரிக் ஆலம் முஹம்மது ஜாகீர் (பீகார், 46), முஹம்மது முதாசிம் ராசா(பீகார், 27), தினகரன் பாய் ஹரிபாய் தண்டல் மற்றும் ரமேஷ் கபேலி (தெலுங்கானா, 32) ஆகியோர் ஆவார்கள்.
சவுதி தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்பு குழுவினர்கள் காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் உடல்கள் மீட்டனர். விபத்தில் 15 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அபாஹா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அபு ஆரிஷ் கிங் ஃபஹ்த் மருத்துவமனை, ஜிசான் முஹம்மது பின் நாசர் மருத்துவமனை மற்றும் பைஷ் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பீஷ் பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் உயிரிழந்த விஷ்ணு இந்த நிறுவனத்தில் பொறியாளராக கடந்த மூன்று வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். விஷ்ணுவின் சகோதரர் மனு இங்கிலாந்தில் மென்பொருள் பொறியாளராக உள்ளார். விஷ்ணுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. புகைப்படம் உயிரிழந்த தாரிக் ஆலம் முஹம்மது ஜாகீர் (பீகார், 46), முஹம்மது முதாசிம் ராசா(பீகார், 27), ரமேஷ் கபேலி (தெலுங்கானா, 32) மற்றும் கேரளா இளைஞர் பிரசாத்(31) ஆகியோர் ஆவார்கள்.