பாறுக் ஷிஹான்.
அம்பாறை மாவட்டம், கல்முனைப் பிராந்தியத்திற்கான புதிய உதவிப்பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச்சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடந்த 2025.01.24ம் திகதியன்று கடமையைப்பொறுப்பேற்றுக் கொன்ண்டுள்ளார்.
ஏற்கனவே கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக இருந்த ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக கொழும்பு பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றதைத் தொடர்ந்து எழுந்த வெற்றிடத்திற்கு புதிதாக அவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர் தனது ஆரம்பக்கல்வியை தரம் 01 தொடக்கம் 05 வரை பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலயத்திலும் 06-07 வரை பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திலும் 08 தொடக்கம் உயர்தரம் வரை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலும் கற்றார்.
1989ல் உப பொலிஸ் பரிசோதகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து 2002 வரையும் கல்முனை, வெல்லாவெளி, தெஹிவளை, கண்டி ஆகிய பொலிஸ் நிலையங்களில் உப பொலிஸ் பரிசோதகராகவும் இடைப்பட்ட காலத்தில் யுத்த பிராந்திய பயிற்சி விசேட படைப்பொறுப்பதிகாரியாகவும் சேவையாற்றினார்.
பின்னர் 2002-2013 வரை பொலிஸ் பரிசோதகராக அம்பாரை, மத்திய முகாம், அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, பொலிஸ் தலைமையகம், கொம்பனித்தெரு ஆகிய பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
பின்னர் 2013-2016 வரை பிரதான பொலிஸ் பரசோதகராக அம்பாரை, பொத்துவில், சம்மாந்துறை பொலிஸ் நிலையங்களில் சேவை புரிந்ததோடு, அம்பாரை மாவட்ட குற்றப்புலனாய்வுப்பிரிவு மற்றும் கல்முனை பிராந்திய விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொலிஸ் வளாகப்பொறுப்பதிகாரியாகவும் சேவையாற்றினார்.
அத்துடன், அம்பாறை மாவட்டம், பாலமுனைப் பகுதியிலிருந்து இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட முதல் உப பொலிஸ் பரிசோதகர் முதல் பொலிஸ் பரிசோதகர் முதல் பிரதான பொலிஸ் பரிசோதகர் எனும் சிறப்புகளுக்குரியவராவார்.
இது தவிர, 2008ல் அகில இலங்கை ஐக்கிய ஒன்றியத்தினால் சாமஶ்ரீ தேசமான்ய விருதுகளையும் பெற்றார்.
யுத்த காலப்பகுதியில், யுத்த பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்ட சமயம் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றியதன் பேரில் பொலிஸ் மாஅதிபரினால் 03 தடவைகள் பொலிஸ் மாஅதிபர் விசேட விருதினைப் பெற்றிருக்கின்றார்.
பொலிஸ் கூட்டுப்பயிற்சி மட்டுமன்றி, விசேட யுத்தப் பயிற்சியும் பெற்றுள்ள இவர், யுத்த பயங்கரவாத முறியடிப்பின் போது காயங்களுக்குட்பட்டு நாட்டின் உடைமைகளைக் கைப்பற்றி, சொத்துக்களைக் காப்பாற்றி வீரச்சாதனை படைத்தமைக்காக 2009ல் தேசபுத்ரசம்மான விருதும் பெற்றிருந்தார்.
2002 இல் All India Institute நிறுவனத்தில் Dip in Computer Studies, 2007 இல் ABM நிறுவனத்தில் Dip in Psychology, 2012 இல் Srilanka Police Academy இல் Dip in Crime Investigation, 2013 இல் Srilanka Police Academy இல் Dip in Leadership ஆகிய கற்கைநெறிகளையும் கற்றார்.
இதே வேளை, நேர்மையாகவும் கண்ணியமாகவும் தனது கடமையைச்செய்யும் ஆற்றல் கொண்ட புதிய உதவிப்பொலிஸ் அத்தியட்ச௧ரை பல்வேறு தரப்பினரும் பாராட்டுவதுடன், தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடு பாராது சகல மக்களின் மனதையும் வென்ற ஒரு உயர் பொலிஸ் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.