சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நைனாகாடு ஜப்பார் வாய்க்கால் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டு, அவரது ஊடக உபகரணங்கள் பறிக்கப்பட்ட சம்பவம் இன்று 2025.01.02 வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நைனாகாடு, ஜப்பார் வாய்க்கால் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக விவசாயிகளிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற நியுஸ் பெஸ்ட் அம்பாறை செய்தியாளர் அச்சல உபேந்திர ஊடகவியலாளர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் குறித்த ஊடகவியலாளரது புகைப்படகருவிகள் மற்றும் தொலைபேசி போன்றவற்றை பறித்தெடுத்து சென்றுள்ளதாக இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை வழங்கி இருந்தார்.
குறித்த முறைப்பாடுக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்ட போது பறித்துச்செல்லப்பட்ட புகைப்படகருவிகள் மற்றும் தொலைபேசிகளையும், ஆறு சந்தேக நபர்களையும், மோட்டார் சைக்கிள் மற்றும் மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான குறித்த ஊடகவியலாளர் அச்சல உபேந்திர அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.