மதப் பார்வையில் சமூகப் பணி
மதப் பார்வையில் சமூகப் பணியை எடுத்து நோக்கினோமானால் உழைப்பு மற்றும் கருணை உள்ளத்தோடு ஓர் நிலையான சமுதாய வளர்ச்சியை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். அனைத்து மதங்களிலும் மனிதாபிமானம், கருணை, அறம் போன்றவற்றால் பிறரின் துயரங்களை புரிந்து கொண்டு அவற்றை நீக்கி சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டுள்ளது. மதப் பார்வையில் சமூகப் பணியானது ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும் வலுபடுத்தக் கூடிய ஒன்றாகும். மதங்களின் அடிப்படையில் சமூகத்தில் ஒவ்வொரு நபருக்கும் உதவி செய்வதென்பது அடிப்படை கொள்கையாகும். சமூகப் பணியானது சுய நலத்தை தாண்டி அனைவருக்கும் நன்மை சேர்க்க கூடிய ஓர் வழியாகும். மதங்கள் பல சமூகப் பணி மூலம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் சமத்துவத்தை ஏற்படுத்துவதையும் முன்னிலைப் படுத்துகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மதத்தில் உள்ள சமூக பணியின் பங்குகளை நோக்குவோம்.
பௌத மதத்தில் இதனை எவ்வாறு கூறியிருப்பதென்றால் அடிப்படையான கொள்கைகளையும் மதத்தின் நெறி முறைகளையும் பயன்படுத்தி மக்களின் நலனுக்காக செய்யப்படும் சேவைகளாகும். தர்மம், கருணை, மனிதாபிமானம் போன்ற கருத்துக்களை முன்வைக்க கூடியாதாக காணப்படுகிறது. கருணை மூலம் கருதப்ப டுவது என்னவென்றால் மற்றவர்களின் துன்பங்களை உணர்ந்து அவர்களுக்கு உதவுவதாகும். அதே போன்று அகிம்ஷா என்பது இழிவுத்தன்மை இல்லாமல் வன்முறை தவிர்த்து வாழ்வதாகும். இதன் மூலம் உயிரின் மதிப்பு மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. பௌத மதத்தில் இன்னொரு முக்கிய கடமையாக தானம் வழங்குதல் காணப்படுகிறது. தானம் என்பது எந்தவொரு எதிர்ப் பார்ப்புமின்றி பிறரின் நன்மைக்காக தன்னிச்ச்சையாக செய்யும் உதவியாகும். அதனை பௌதர்கள் புண்ணியத்தின் பணி என்று சொல்கின்றனர். தானத்தில் பல வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம். பொருளாதார தானம் எனப்படுவது ஏழைகளுக்கு வழங்கும் பணம், உணவுப் பொருட்கள் உடைகள் போன்றவை உள்ளடங்கப்படும். அதே போன்று ஆரோக்கியதிற்கான தானம் எனப்படுவது சிகிச்சைகள், மருத்துவ உதவிகள், ஆரோக்கிய சேவைகள் வழங்குவதாகும். அடுத்ததாக கல்வி தானம் எனப்படுவது ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதாகும். தானம் ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்யக் கூடிய ஒன்றாகும். பௌத மதமானது உளவியல், ஆன்மீக ரீதியிலான கஷ்டங்களை நிவர்த்தி செய்யும் பணிகளையும் மேற்கொள்கிறது.
அதே போன்று இந்து மதத்தில் சமூகப் பணியை பற்றி எவ்வாறு சொல்லியிருப்பதென்றால் மக்களின் துன்பத்தை போக்குவதற்கான மற்றும் சமூகத்தில் நன்மை ஏற்படுத்துவதற்கான செயல்களாகும். இந்து மதமும் அறம், கருணை, சமாதானம் போன்ற செயல்களை பேணக்கூடிய ஒன்றாகும். பௌத மதத்தில் போன்று இந்து மதத்திலும் தானம் வழங்குவது முக்கிய செயலாகக் காணப்படுகிறது. வறியவர்களுக்கு உதவுவது, கல்வி வழங்குவது, வளப்பாதுகாப்பு நடவடிக்கைகள் புனித சேவைகளாக கருதப்படுகிறது. தமிழ் மொழியில் பரிதி என்ற சொல் நற்பெயர் என்று பொருள்படும். ஒருவர் தனது வாழ்க்கையில் தாராளத்தன்மையுடன் பகிர்ந்து கொள்வதை குறிக்கின்றது. அதே போன்று விவசாயிகளுக்கான உதவிகள், பயிர் காவல் திட்டங்கள் போன்றவையும் வழங்கப்படுகிறது.
காப்பியங்களிலும் சமூகப் பணி தொடர்பான பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன அவற்றை பற்றி பார்ப்போம்.
திருக்குறள், மணிமேகலை, மகபபாரதம் போன்ற நூல்களில் கூட சமூக பணி மற்றும் சமூக மேம்பாட்டை பற்றி குறிப்பிடுகிறது.அந்த வகையில் திருக்குறளில் தனி மனித மேம்பாட்டையும், சமூக மேம்பாட்டையும் பற்றி திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓர் குரலை எடுத்து நோக்கி பார்த்தோமானால்
" ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வண்க நகர் " (குறல் எண் 228)
இதன் மூலம் நாடப்படுவது என்னவென்றால் தாங்கள் சம்பாதித்ததை தாங்களே வைத்துக் கொண்டு பிறருக்கு கொடுக்காமல் கஞ்சத்தனம் கொண்டு கொடுப்பதன் இன்பத்தை அறியாதாவர்கள்.
அதே போன்று இன்னொரு குறளில்
"காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்கே உள." (குறள் எண் 527)
இக்குறள் என்ன சொல்வதென்றால் காக்கை உணவு கிடைத்தால் தான் மட்டும் உண்ணாது கரைந்து தன் கூட்டம் முழுவதையும் கூப்பிடும். தனக்கு கிடைத்த உணவை எல்லா காகங்களுடன் சேர்த்து உண்ணும். அத்தகைய காக்கை குணம் உள்ள மனிதர்களிடம் தான் செல்வம் சேரும் என்று குறிப்பிடுகிறார் .
மகாபாரதத்திலும் சமூகப் பணி, சமூக சேவை தொடர்பாக குறிப்பிட்டுள்ளது.
வனவாசத்தின் போது பாஞ்சாலி தனக்குக் கிட்டிய அட்சய பாத்திரத்தின் மூலம் தனக்கும் பாண்டாவர்களுக்கும் மட்டுமா உணவு எடுத்துக் கொண்டாள்? தங்களை தேடி வந்த முனிவர்களுக்கெல்லாம் கூட அல்லவா அவள் உணவளித்தாள்?
ஒருவர் தனக்காக மட்டும் வாழாமல் பிறர் நலம் பேணுவதற்கும் வாழ வேண்டும் என்பதை குறிப்பிடுகிறார்.
சீத்தலை சாத்தனார் எழுதிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் முக்கிய நோக்கமே சமூக சேவையை வலியுறுத்துவதாகும். இதனை சமுதாய சீர்திருத்த காப்பியம் என்று தான் புகழப்படுகிறது. அதன் கதாநாயகி மணிமேகலை சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள். துறவு நெறியில் நாட்டம் கொண்டவள். அவளுக்கு வற்றாது உணவு வழங்கும் அமுதசுரபி என்ற அற்புத பாத்திரம் கிடைக்கிறது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதை உணர்ந்த அவள் ஏழை எளியவர்க்கெல்லாம் அமுதசுரபி மூலம் உணவை வாரி வழங்குகிறாள். அவள் பசிப்பணி தீர்க்கும் சமூக சேவையை தவமாய் மேற்கொண்டவள்.சமூக உணர்வோடு மனிதன் வாழ வேண்டும் என்பதற்காக படைக்கப்பட்ட காபியங்களுள் மணிமேகலையும் ஒன்றாக காணப்படுகிறது.
ஆகவே சமூகப் பணியானது இந்து மதத்திலும் முக்கிய இடம் வகிக்கின்றது.
இஸ்லாம் மார்க்கமும் சமூக பணியின் முக்கியத்துவத்தை பற்றி பல இடங்களில் வலியுறுத்துகிறது.இறைவனின் தூதர் நபி ஸல் அவர்கள் தனது வாழ்க்கையில் பல சமூக பணிகளை செய்து வந்தனர். சதகா, ஸகாத், பைதுல் மால் போன்ற கொடுப்பனவுகளை மக்களுக்கு கொடுத்து வந்தனர். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற முறையில் அன்றிலிருந்து உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வந்தது. சமூகத்தில் அனைத்து மக்களும் தொழில் செய்ய வேண்டும். அவ்வாறு தொழில்கள் இல்லாதோருக்கு பல ஆதரவுகளை வழங்கினார்கள். தனது அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய குடும்பங்களில் வாழும் பிள்ளைகளுக்கு இலவச கல்வியை வழங்கினார்கள், விதவைகளுக்கு உதவி செய்தார்கள், அநாதைகளை பொறுப்பெடுத்தார்கள். பாதைகளில் இருக்கும் கற்கள், முற்கள் போன்றவற்றை அகற்றினார்கள்.
உதாரணமாக ஓர் சம்பவத்தை நோக்குவோம்.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரத் செய்து மதீனா வந்த புதிதில் முஸ்லிம்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது வறட்சியான காலமும் கூட அது. அருகிலிருக்கும் ஒரு யூதனின் பிஃர-ரூமா எனும் கிணற்றிலிருந்து தான் முஸ்லிம்கள் ஒரு முத்து விலையாக கொடுத்து ஒரு பாத்திரம் (ஒரு குடம்) தண்ணீர் பெற்றுக் கொண்டிருந்தனர்.
விலையில்லாமல் அந்த தண்ணிரை மக்களுக்கு யாராவது பெற்றுத் தர மாட்டார்களா? என நபி (ஸல்) தமது விருப்பத்தை தெரிவித்தபோது, ஹல்ரத் உஸ்மான் (ரலி) 12,000 தீனார் கொடுத்து ஒரு நாள் யூதனுக்கும், ஒரு நாள் முஸ்லிம்களுக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் உரிமையை பெற்றுத்தந்தார்கள். மீண்டும் நெருக்கடி ஏற்படவே மீண்டும் 12,000 தீனார் கொடுத்து முழுக்கிணற்றையும் விலைக்கு வாங்கி மதினமாநகர் முழுவதுமுள்ள மக்களெல்லாம் பயன்பெறுமளவுக்கு அதை அர்ப்பணித்தார்கள்.
இவ்வாறான சேவைகள் பல செய்யப்பட்டு வந்தது.
ஸதகா என்று சொல்லப்படும் சேவையானது என்னவென்றால் எந்தவொரு எதிர் பார்ப்புமின்றி மனப்பூர்வமாக சமூகத்திற்கு பணமாகவோ, பொருளாகவோ உதவிகளை வழங்குவதாகும். இது பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை பேணுவதற்கான வழியாகும். அதிகமாக வறுமையில் உள்ளோருக்கு உதவக் கூடியதும் பொருளாதாரத்தை மேற்படுத்தக் கூடிய சேவையாகும். ஸதகாவின் பிரிவுகள் காணப்படுகிறது. அவற்றை பார்த்தோமானால் பொருளாதார ஸதகா எனப்படுவது பொருட்கள், பணம், உணவு போன்றவற்றை வழங்குவதாகும். அவசர உதவி சார்ந்த ஸதகாவில் அடங்குவது சிறுவர் பராமரிப்பு, அநாதைகளுக்கான உதவிகள் போன்றவை ஆகும். அடுத்து நேர்ச்சை செய்து ஸதகா செய்வதென்பது கட்டிடங்கள் அமைத்து கொடுத்தல் சுகாதார வசதிகள் செய்து கொடுத்தல் போன்றவையாகும். இந்த சேவையின் மூலம் பிறர் மீதான அன்பு, கருணை, ஒற்றுமை போன்றன வலுப்பெறுகிறது.
இஸ்லாம் சமயத்தில் இருக்கும் இன்னொரு கட்டாய கடமைகளுள் ஸகாத் என்பதும் ஒன்றாகும். ஸகாத் என்ற சொல் ஓர் அரபு மொழி சொல் ஆகும். இதன் விளக்கம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பாக 2.5 % என்ற வீதத்தில் தனது சொத்துக்களில் ஆண்டு தோறும் ஏழைகள், தேவையானவர்கள் போன்றோருக்கு வழங்கும் நன்கொடை ஆகும். இதனை பெற தகுதியானவர்கள் என்று சிலரை பட்டியற்படுத்துகின்றது. எவ்வித வருமானமும் அற்ற பரம ஏழை, தனக்கும் தனது பராமரிப்பில் உள்ளோருக்கும் போதுமான அளவு செலவு கிடைக்கப்பெறாதோர், ஸகாத்தை வசூலிபோர், விநியோகித்தல் போன்ற பணிகளில் ஈடுபாடுவோர், இஸ்லாத்தின் பால் கவரப்பட்டவர்கள், தவணை முறையில் உரிமைச்சீட்டு எழுதப்பட்ட அடிமை,மற்றும் நியாயமான காரணங்களுக்காக கடன் பட்டு அதனை தீர்க்க வழியில்லாதவர்கள் போன்றோர் உள்ளடங்கப்படும்.
கிறிஸ்தவ சமயத்தை எடுத்து
நோக்கினோமனால் சமூகப் பணிகள் பல காணப்படக் கூடியாதாக உள்ளது. மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், ஏழைகள் போன்றோருக்கு கிறிஸ்தவ அமைப்புக்கள் உதவி செய்யக் கூடியதை நாம் அவதானிக்கலாம். குடும்ப பிரச்சினைகள் காணப்படுவோருக்கு பல ஆதரவுகளை வழங்குவதையும் கவனிக்க முடிகிறது. அதே போன்று சிறையில் இருக்கும் மனிதர்களுடன் பணியாற்றி அவர்களுக்கு சமுதாயத்துடன் வாழவும் உதவி செய்கிறது. கிறிஸ்தவ சமய அமைப்புகள் மருத்துவ உதவிகள், மருந்துகள் வழங்கி உதவுகின்றன. குற்றவாளிகளுக்கு கிறிஸ்தவ நெறிகள் படி மீண்டும் நல்லவைகளை கற்றுக் கொடுத்து பரிசுத்த வாழ்க்கையை வழங்குகின்றது. ஆன்மீக தேவைகளை கையாள்வதற்காக கிறிஸ்தவ பிரிவுகள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் மனித உரிமைகள் அனைத்து ம் பேணப்பட வேண்டும். அதே போன்று சமூக நீதி கையாளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கடவுள் உங்களை அன்போடு காதலிக்கிறார். அதனால் நீங்கள் மற்றவர்களை அன்புடன் கருதுங்கள் " என்று கூறியுள்ளது. அதே போன்று தானத்தையும் முக்கியமாக கூறியுள்ளது. " எந்தவொன்றை தானமாகக் கொடுத்தால் அது உங்களுக்கு பல மடங்காகத் திரும்பும் "
ஆகவே மதப் பார்வையில் சமூகப் பணியானது சிறப்பு இடம் பெறக்கூடிய ஒன்றாகும்.
ருஸ்கா ருஸ்லி.
மாத்தறை
சமூகப் பணி இளம் கலை சிறப்புப் பட்டம்
முதலாம் வருட மாணவி
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்
சீதுவை.