Ads Area

முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலைச்செய்து வருகின்றது - ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஏ.சி.யஹ்யாகான்.

 பாறுக் ஷிஹான்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலைச் செய்து வருவதாக ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை சாய்ந்தமருது பிரதேசத்தில் திறந்து வைத்ததன் பின்னர் நேற்று (23) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மேலும் அங்கு கருத்துத்தெரிவிக்கையில், 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 15 வருடங்களாக இணைந்து பயணித்துள்ளேன். மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் இக்கட்சியை எமது சமூகத்தின் இருப்புக்காகவும் பிரதேச அபிவிருத்திக்காகவும் உருவாக்கினார். 


ஆனால், இப்போதுள்ளவர்கள் தமது கஜானாக்களை நிரப்புவதற்காக இதனைப்பாவித்து வருகின்றனர். நான் இக்கட்சியினால் பல்வேறு வெட்டுத் குத்துக்களையும் ஏமாற்றங்களையும் நேரடியாகச் சந்தித்தவனாகக் காணப்படுகின்றேன். எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு எந்த எண்ணமுமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ ஏமாற்று அரசியலைச்செய்து வருகின்றது.


எனவே தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி நாட்டை நேசிக்கும் சிறந்த மக்கள் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் உருவாகியுள்ள குறித்த கட்சியின் பொதுச்செயலாளராக மக்களுக்கு சேவையாற்றவுள்ளேன்.


ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரியாலயங்களில் ஒன்று சாய்ந்தமருதில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.


நாட்டிலுள்ள அநேகமான கட்சிகள் மீது மக்கள் வெறுப்புற்றுள்ளதாகவும் மக்களது நலனுக்காக மக்களது வாக்குகளைப்பெற்று எதிர்க்கட்சிகளில் இருக்கும் சில அரசியல்வாதிகள் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கும் மனோ நிலையில் இருப்பதாகவும் அவ்வாறான நிலை மாறி நாட்டையும் மக்களையும் பற்றியும் யோசிக்க கூடிய சிறந்தவர்கள் தங்களது கட்சியின் பக்கம் அணிதிரள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.


சுசந்த புஞ்சிநிலமே  பிரதி அமைச்சராக இருந்த காலங்களில் இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களதும் நாட்டினதும் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர்.


எனவே, நாட்டுப்பற்றுள்ள அனைத்து மக்களும் இன, மத பேதமின்றி தங்களுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe