Ads Area

கட்டாக்காலி மாடுகளை அறுத்து ஏழைகளுக்கு வழங்குவோம் - தலைமை வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி.

பாறுக் ஷிஹான்.


வீதியில் மக்களின் போக்குவரத்தினைச் சீர்குலைக்கும் கட்டாக்காலி மாடுகள் உடனடியாக பிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு அறுத்து பங்கிட வேண்டிய நிலைமை ஏற்படுமென நாவிதன்வெளி பிரதேச சபைத்தேர்தலில் கால்பந்து சின்னம் சுயேச்சைக்குழு தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர் தெரிவித்தார்.


அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச  சபைகளுக்கான வேட்புமனுக்களைத்தாக்கல் செய்த பின்னர் அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் பகுதியிலுள்ள அவரது அலவலகத்தில் இன்று (23) நடாத்திய விசேட ட ஊடகவியலாளர் சந்திப்பில்   கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,


நாவிதன்வெளி பிரதேச சபை அதிக வரிச்சுமையை மக்களுக்கு விதித்துள்ளது. இதுவொரு பாரிய அநீதி. பிரதேச சபை அதிகாரத்தை மக்கள் எனக்கு வழங்கினால் நிச்சயம் இவைகளுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும்.கட்டாக்காலி மாடுகள், நாய்கள் வீதிகளில் அதிகளவாக காணப்படுகின்றன. எதிர்காலத்தில் நாவிதன்வெளி பிரதேச சபைக்குச்செல்வோமாயின் கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்களை அழைத்து கலந்துரையாடுவோம்.இது தவிர, கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு அறிவிப்போம். 


அவ்வாறு எமது சபையினூடாக விடுக்கப்படும் அறிவுறுத்தலை மீறும் கட்டாக்காலி மாடுகள் உடனடியாக  பிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு அறுத்துப்பங்கிட வேண்டிய நிலைமையேற்படும் என்பதை இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.பிரதேச சபை விதித்துள்ள வரிகளைக் குறைப்பதே திட்டம். மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்க நடவடிக்கையெடுப்பேன். நாவிதன்வெளி பகுதியில் 4 இறைச்சி கடைகள் உள்ளன. கேள்வி மனு பல இலட்சமாகவுள்ளது. 


இதனைக்குறைத்தால் ஒரு கிலோ இறைச்சியை 1,800 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும். வீணாக மக்கள் மீது அதிக வரிச்சுமை பிரயோகிக்கப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பிரதேச சபை அதிகாரம் எமது குழுவுக்கு கிடைக்கும் பட்சத்தில் ஒரு மாதகால இடைவெளிக்குள் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன்.திருமண மண்டபத்துக்கும் அதிக வரி இங்கு அறவிடப்படுகின்றது. அதாவது, ஒரு திருமணத்துக்கு 50 ஆயிரம் ரூபா அறவிடப்படுகின்றது. இதுவும் நிவர்த்தி செய்யப்படுமென்றும் நளீர் அபூபக்கர் மேலும்  தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe