பாறுக் ஷிஹான்.
கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச்செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இப்பஸ் தரிப்பு நிலையம் நீண்ட காலமாக புனரமைப்புச்செய்யப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதால் பயணிகளும் வாகனச்சாரதிகளும் பல்வேறு அசௌகரிகங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பஸ் தரிப்பு நிலையக்கட்டடம் மழை காலங்களில் பல்வேறு அசௌகரிகங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பஸ் தரிப்பு நிலையக்கட்டடமும் மோசமான நிலையில் காணப்படுவதோடு, அப்பிரதேசங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும், பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கல்முனை பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார், குருநாகல், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு நாளாந்தம் பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன.
நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வரும் பயணிகள் தங்குவதற்கும் குறிப்பாக, அமர்ந்து கொள்வதற்கான வசதிகளும் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இப்பஸ் தரிப்பு நிலையத்தை சகல வசதிகளுடன் கூடிய பஸ் தரிப்பு நிலையமாக புனரமைத்துத்தருமாறும் கிளீன் சிறீ லங்கா வேலைதிட்டத்தின் மூலம் சீர்செய்த தருமாறும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பேரூந்து நிலையத்தின் மேல் கட்டடத்தில் பல்வேறு துர்நடத்தைகளுக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம், கல்முனை மாநகர சபை ஆகியவற்றுக்கு அருகாமையிலுள்ள இப்பேரூந்து நிலையத்தில் இவ்வாறு நிலைமை காணப்படுவது தூரதிஸ்ட வசமாகும்.
அது மாத்திரமன்றி, உரிய பாதுகாப்பு வசதிகளின்மையினால் இவ்வாறான பிரச்சினைகள் இங்கு ஏற்படுகின்றன. இது தவிர, இக்கட்டட கூரைகள் பயணிகள் மீது இடிந்து விழும் நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் மக்கள் குறிப்பிட்டனர்.
மேலும், பேரூந்து நிலையத்தின் மேல் கட்டடத்தில் நீண்டகாலமாக புறாக்கள் காணப்படுவதனால் ஒரு சரணாலயமாக காணப்படுவதாகவும் அதன் எச்சங்கள் நிறைந்த இக்கட்டடத்தில் துர்நாற்றம் வீசுவதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.