Ads Area

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச்சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர்   அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் ஒருவரும் பல்கலைக்கழக சாரதியும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும் என ஆறு பேர் தற்போது வரை  சிகிச்சை பெற்று வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப்பதிவாளர் எம்.ஐ.நௌபர் தெரிவித்தார்.


இதே வேளை, மறு அறிவித்தல் வரை கடந்த செவ்வாய்க்கிழமை (15) இரவு விடுதியில் தங்கி கல்வி கற்றுவரும் 1ம் வருட பொறியியல்பீட மாணவர்கள்  அனைவரும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியெறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாணவர்களும் வெளியெறியுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.


சிரேஸ்ட மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதுடன், குறித்த மோதலானது ஒரே வகுப்பினைச்சேர்ந்த 1ம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே விடுதியில் ஏற்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.


இதனால் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல்பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்றிரவு 8 மணியுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல்பீடத்தின் முதலாம் வருட மாணவர்களிடையே நேற்று ஏற்பட்ட   மோதலை அடிப்படையாகக்கொண்டு இவ்வறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.


இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.


செய்தி பின்னணி


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச்சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் ஐவர்  மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவரும் தாக்குதலுக்குள்ளான நிலையில் செவ்வாய்க்கிழமை  (15) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அதன்  பின்னர் குறித்த தாக்குதலின் காரணமாக ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாணவர்களில் நால்வர் விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப்   பதிவாளர் எம்.ஐ.நௌபர் குறிப்பிட்டார்.


இதேவேளை, ஒலுவில் வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 4 மாணவர்களும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.


மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட  1ம் வருட  மாணவர்கள் இரண்டு குழுக்களாகப்பிரிந்து ஏற்பட்ட மோதல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe