சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த யூ.எம் அஸ்லம் அவர்கள் இடமாற்றலாகி ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு கடமையேற்கவுள்ளார்.
இவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (05) செவ்வாய்க்கிழமை நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமீல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மட் ஹனீபா அவர்களின் தலைமையில் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கடந்த 2015.08.25ம் திகதி அரச சேவையில் உள்ளீர்க்கப்பட்ட இவர் இன்று ஒரு உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றுகின்றார். இவர் 1992ம் ஆண்டு முஹம்மது இஸ்மாயில் உவைத்தீன் மற்றும் அப்துல் மஜீட் அவ்வாப்பிள்ளை ஆகியோருக்கு மகனாக காத்தான்குடி காங்கேயன்னோடை கிராமத்தில் பிறந்தார்.
இவர் தனது கல்வியை காங்கேயன்னோடை அல் அக்ஸா மகா வித்தியாலத்தில் தரம் 01 தொடர்க்கம் 13ம் ஆண்டு வரை கல்வி கற்று பின்னர் தனது பட்டப்படிப்பை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் MIT துறையில் பூர்த்தி செய்து பட்டம் பெற்றார்.
இவர் 2015 ஆண்டு விவசாய உற்பத்தி ஆராய்ச்சி உதவியாளராக (ARPA)வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தில் கடமையாற்றி பின்னர் 2017ம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றினார்.
அதன் பின்னர் 2019ம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பிரதேச செயலகத்தில் ஒரு வருடம் கடமையாற்றி 2021.04.22ம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றினார்.
மேலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தை பூர்த்தி செய்து தற்போது இலங்கை சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக(Attorney at low) படித்துக் கொண்டு இருக்கின்றார். என்பதோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொதுத் துறை நிர்வாகத்தில் முதுமாணி பட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றார். அத்தோடு அரச துறையில் இடம்பெறும் சகல போட்டிப் பரீட்சைகளுக்குமான வழிகாட்டும் நாடறிந்த வளவாளராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அமைதியான சுபாவம் கொண்ட இவர் கடமையில் கண்ணியமாகவும்,நேர்மையாகவும் செயற்படுபவர் என்பதோடு எல்லோரிடனும் அன்பாகவும் பண்பாகவும் பழககூடிய ஒரு நல்ல மனிதர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் பிரியாவிடை நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம், கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமில்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன் ,மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோஸா மற்றும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஒரு துடிப்புள்ள இளைஞனாக பிரதேச செயலாளரருக்கு என்றும் பக்கபலமாக செயற்பட்ட இவர் உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் மரியாதையான மனபக்குவத்துடன் பழகுவதோடு உத்தியோகத்தர்கள் மனதில் என்றும் நீங்காத உதவி பிரதேச செயலாளராக திகழ்ந்து வந்தார் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
சம்மாந்துறை மண்ணின் அபிவிருத்தியிலும் காணி விடயத்திலும்,காணிப்பிணக்குகளை தீர்ப்பதிலும்,சிறப்பாக பங்காற்றிய உதவி பிரதேச செயலாளர் அஸ்லம் அவர்களின் சேவையை பாராட்டுவதில் சம்மாந்துறை மண்ணும்,பிரதேச செயலகமும் பெருமிதம் அடைகின்றது.