குவைத் உள்துறை இரவு (16/03/26) வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில் நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் இணைந்து செயல்பட்டு வந்த 16 தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதிகாரிகள் கூறுகையில் கைது செய்யப்பட்ட நபர்களில் 14 குவைத் குடிமக்களும், 2 லெபனான் நாட்டினரும் அடங்குவர் எனவும், நாட்டில் ஆட்சி கவிழ்ப்புகளை நடத்துவதற்காக இவர்கள் திட்டமிட்டிருந்தது தொடர்பான அதிர்ச்சி தகவலும் விசாரணையில் இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாட்டின் இறையாண்மையை பலவீனப்படுத்தி சீர்குலைக்கவும், வதந்திகளைப் பரப்பவும், குழப்பத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.அதேபோல் தேசியப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கவும் இந்தக் குழு சதி திட்டங்கள் தீட்டியிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 16 பேர் அடங்கிய தீவிரவாத குழுவினரிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஆயுதங்கள், மோர்ஸ் குறியீட்டு முறை தகவல் தொடர்பு சாதனங்கள், ட்ரோன்கள், தீவிரவாத குழுக்களின் அடையாள கொடிகள், பயங்கரவாத அமைப்புகளின் படங்கள், வரைபடங்கள், போதைப்பொருட்கள், பணம் மற்றும் பயிற்சி ஆயுதங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





