இன, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை போற்றவும், உத்தியோகத்தர்களிடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்தவும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித நோன்புப் பெருநாள் விசேட விருந்துபசார நிகழ்வு இன்று (06) திங்கட்கிழமை அலுவலக கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் வி. வாஸீத் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதன்போது மார்க்க சொற்பொழிவு மௌலவி அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம் சாஜீத் (நழிமி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
"பெருநாள் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்லாது," அது சக உத்தியோகத்தர்களிடையே அன்பு, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்க்கும் ஒரு பாலமாக அமைகின்றது.
இவ்வாறான ஒன்றுகூடல்கள் அலுவலகப் பணிகளுக்கு மத்தியில் உத்தியோகத்தர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், மனமகிழ்ச்சியையும் தருவதாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல். முஹம்மது அஸ்லம், கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமில்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோசா, , நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளிர் ஆகியோருடன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த இந்தத் தருணத்தில், உத்தியோகத்தர்கள் அனைவரும் பாரம்பரிய உணவு வகைகளுடன் கூடிய விசேட விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் இந்த முன்னெடுப்பு, அரச அலுவலக கலாசாரத்தில் ஒரு ஆரோக்கியமான மற்றும் உன்னதமான முன்னுதாரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








