சம்மாந்துறை அன்சார்.
குவைத்தின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தத் திட்டமிட்ட பயங்கரவாத சதி ஒன்றைத் தங்களது பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் நாசர் பௌஸ்லைத் (Brigadier General Nasser Bousailit) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஒரு பயங்கரவாதக் குழுவை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குழுவினர் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் பணம் திரட்டி வந்ததும், பல்வேறு நாசவேலைகளுக்குத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது."
இந்த விவகாரத்தில் தொடர்புடைய 24 குவைத் குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குடியுரிமை ரத்து செய்யப்பட்ட நபர் ஒருவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், பின்வரும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன:
01. பெரும் அளவிலான பணம்.
02. நாட்டில் தடை செய்யப்பட்ட சில நபர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள்.
03. பயன்படுத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்பார்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.




