சம்மாந்துறை பிரதேச செயலக வரலாற்றிலும், ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலும் ஒரு முன்னோடி முயற்சியாக, நவீன தொழில்நுட்பத்திலான 'e-SLIMS' இலத்திரனியல் காணி உரிமப்பத்திரங்கள் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேற்று (15) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காணி உரிமையாளர்களுக்குப் புதிய யுகத்தின் டிஜிட்டல் முறைமையிலான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது, கிழக்கு மாகாணத்திலேயே முதன்முறையாக 8 பயனாளிகளுக்கு இலத்திரனியல் முறையிலான (e-SLIMS) காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த 49 பேருக்கு பூரண அழிப்பு பத்திரங்களும், 74 பயனாளிகளுக்குப் புதிய காணி அனுமதிப்பத்திரங்களும் என பெருமளவிலான மக்கள் இன்றைய தினம் தமது காணி உரிமைகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி, விவசாயம், கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி, அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.ஜெகராஜன் ஆகியோர் கலந்துகொண்டதுடன், விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப்,கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் கே.எல்.எம். முஸ்ஸம்மில், உதவி பிரதேச செயலாளர் வி. வாசீத் அஹமட், கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா ஆகியோரும் பங்கேற்றனர். மேலும், சம்மாந்துறை அமைப்பாளரும் 'Clean Sri Lanka' திட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான பிரதேச சபை உறுப்பினர் வை.பி. நவாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எஸ்.எம். ஆரிப் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
நிர்வாக நடைமுறைகளை எளிதாக்கி, காணி உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் நில அளவைத் திணைக்கள உயர் அதிகாரிகள், காணி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





