சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தரம் மற்றும் நோயாளர்களுக்கான மருத்துவச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு துரித அபிவிருத்திப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன கட்டிடத் தொகுதியில் அத்தியாவசிய மருத்துவப் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேச பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளை மிகவும் வினைத்திறனான முறையில் நிவர்த்தி செய்யும் பொருட்டும், நோயாளர்களின் அதிகபட்ச நலனைக் கருத்திற்கொண்டும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தற்போது சில முக்கிய பிரிவுகளை மறுசீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த உள் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் புதிய மருத்துவப் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து நேரடியாகக் கண்டறிந்து ஆராய்வதற்காக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் (15) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பணிப்பாளர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் விடுதி மறுசீரமைப்புகள், புதிய நவீன மருத்துவ உபகரணங்களின் ஒழுங்கமைப்புக்கள் மற்றும் நோயாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் அல்லது தடங்கல்களும் ஏற்படாத வகையில் சேவைகளைத் தொடர்வது குறித்து விரிவாக ஆராய்ந்தார். இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள், குறைபாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டி.பிரபாசங்கர், விசேட வைத்திய நிபுணர்கள், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உட்பட வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு புதிய பிரிவுகளைத் திறம்பட இயக்குவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் தற்போதைய வசதிகள், நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து மிக விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
சீன அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த நவீன கட்டிடம் விரைவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர், விசேட மருத்துவப் பிரிவுகள் உட்பட பல முக்கிய பிரிவுகளும் அங்கு நிறுவப்பட்டு, சம்மாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களுக்கு நவீனத்துவமிக்க சிறந்த மருத்துவ சேவைகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






