( சர்ஜுன் லாபீர்)
கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளராகக் கடமையாற்றும் கே.எல்.எம். முஸம்மில் அவர்கள், எதிர்வரும் 19ஆம் திகதியுடன் தனது 33 ஆண்டுகால நீண்ட அரச சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இதனை முன்னிட்டு அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் கௌரவிப்பு நிகழ்வு, நேற்று (15) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஸம்மில் அவர்கள், தனது நீண்டகாலப் பணியில் குடியேற்ற உத்தியோகத்தர், காணி உத்தியோகத்தர், சிரேஷ்ட மாவட்ட காணி உத்தியோகத்தர் மற்றும் உதவி காணி ஆணையாளர் எனப் பல்வேறு பொறுப்புமிக்க பதவிகளை வகித்து மாகாணத்தின் காணி நிர்வாகத் துறையில் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
குறிப்பாக, சம்மாந்துறை பிரதேசத்தில் கடந்த 7 வருடங்களாக அவர் ஆற்றிய சேவை பொதுமக்களிடையே பெரும் மதிப்பைப் பெற்றுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொதுமக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களினால், ஓய்வுபெறவுள்ள உதவி காணி ஆணையாளரின் சேவையைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதோடு, நினைவுச் சின்னம் மற்றும் நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச செயலக காணிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டு, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்கள் பணியாற்றிய ஒரு சிறந்த உத்தியோகத்தரான முஸம்மில் அவர்களுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
"பதவிகள் நிரந்தரமானவை அல்ல, ஆனால் நாம் ஆற்றிய சேவையும் அதனால் மக்கள் அடைந்த பயனுமே காலத்திற்கும் பேசப்படும்."






