Ads Area

மஜீத்புரா வித்தியாலயத்தில் வரலாற்றுச் சாதனை படைத்த அதிபர் அல்ஹாஜ் மீராசாஹிப் முஸம்மில் அவர்களுக்கு சமூக நலன்புரி அமைப்பினால் பிரம்மாண்ட பாராட்டு விழா!

சம்மாந்துறை அன்சார்.


சம்மாந்துறை கமு/சது/மஜீத்புர வித்தியாலயத்தில் நீண்ட காலம் அதிபராகக் கடமையாற்றி, அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்ற மதிப்பிற்குரிய அதிபர் அல்ஹாஜ் மீராசாஹிப் முஸம்மில் (மீராசாஹிப் முக்கலுக்தும்மா தம்பதியினரின் புதல்வன்) அவர்களுக்கு, மஜீத்புரா சமூக நலன்புரி அமைப்பினால் பிரம்மாண்டமான சேவை நலன் பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.


கடந்த 2026.05.28 வியாழக்கிழமையன்று மஜீத்புரத்தில் அமைந்துள்ள சமூக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு மிக விமரிசையாக நடைபெற்றது. மஜீத்புர வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சிக்கும், அப்பிரதேசத்தின் பௌதீக வள மேம்பாட்டிற்கும் கடந்த பல வருடங்களாக அயராது உழைத்த அதிபரின் சேவையைப் பாராட்டி, இப்பிரதேச மக்களால் இந்த உணர்வுபூர்வமான விடைபெறல் மற்றும் கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


33 வருட கால அர்ப்பணிப்புமிக்க கல்விச் சேவை:


அதிபர் அல்ஹாஜ் மீராசாஹிப் முஸம்மில் அவர்கள் கல்வித்துறையில் சுமார் 33 வருடங்களுக்கும் மேலாக ஆற்றிய சேவை இம் மண்ணின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். தனது பிறப்பிடத்தைத் துறந்து மஜீத்புர மண்ணை வளம் பெறச் செய்வதற்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்த பெருமை இவரைச் சாரும். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இம்மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட இவரது வழிகாட்டலில், இப்பிரதேசத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்று இன்று உயர்ந்த பதவிகளில் மிளிர்கின்றனர்.


கைநாட்டுக்களாக இருந்த இம் மண்ணின் மைந்தர்களை கையொப்பமிடும் பதவிகள் பெற வழிவகுத்து, பல்கலைக்கழகப் பட்டம் பெறும் ஆடைகள் (Graduation Cloak) அணிவித்து அழகு பார்க்க வழி ஏற்படுத்திய ஒரு சிறந்த வழிகாட்டியாக அவர் போற்றப்பட்டார்.


பாடசாலையின் தரமுயர்வு மற்றும் பௌதீக வளர்ச்சி:


இவரது அயராத முயற்சியினால் 1997 ஆம் ஆண்டில் சா/தரம் (சாதாரண தரம்) கொண்ட பாடசாலையாகவும், பின்னர் 2020 ஆம் ஆண்டில் உ/தரம் (உயர்தரம்) கொண்ட பாடசாலையாகவும் இப்பாடசாலை தரம் உயர்த்தப்பட்டது. இப்பாடசாலையின் பாலர் பாடசாலைக் கட்டிடம் முதல், இங்குள்ள அனைத்து பௌதீக வளங்கள் மற்றும் பசுமையான சுற்றுச்சூழல் உருவாக்கம் என அனைத்திலும் இவரது பெயர் நீக்கமற நிறைந்துள்ளது. அவர் தன் கைகளால் நட்ட தென்னை மரங்களின் வளர்ச்சி, இந்த பாடசாலைக்கும் அவருக்குமான நீண்டகால உறவை பறைசாற்றுகின்றது.


பன்முக ஆளுமை கொண்ட சேவையாளன்:


மத்ரஸாவின் ஆலிமாய் தன் ஆளுமையை வெளிப்படுத்திய இவர், இப்பாடசாலையின் ஆசிரியராக, பிரதி அதிபராக மற்றும் அதிபராகப் படிப்படியாக உயர்ந்து சுமார் 35 வருடங்களாகத் தன் பணியைத் தொடர்ந்துள்ளார். இவரது நற்குண பண்புகளைக் கண்டு பள்ளிவாசல் கூட இவரைத் தன்னகத்தே இணைத்துக் கொண்டது.


தற்போது அவரது ஓய்வுக்காலம் நெருங்கும் நிலையில், அவர் இன்னுமொரு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வது மஜீத்புர மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் எங்கு சென்றாலும் இப்பாடசாலையின் கல்வி அபிவிருத்தியை தன் பிறவிக்கடனாகக் கருதுவார் என்பது ஒட்டுமொத்த ஊர்மக்களினதும் நம்பிக்கையாகும்.


இந்நிகழ்வின் நிறைவில், மஜீத்புரா சமூக நலன்புரி அமைப்பினால் அவருக்கு "சேவை நலன் பாராட்டு" பாசுரம் வாசித்துக் கௌரவிக்கப்பட்டதுடன், அதிபர் அல்ஹாஜ் மீராசாஹிப் முஸம்மில் அவர்களின் எதிர்கால உடல் நலன், நீண்ட ஆயுள் மற்றும் கல்விப்பணிகள் சிறக்க வேண்டி ஊர் பிரமுகர்கள், சமூக நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பிராத்தனைகளை மேற்கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe