Ads Area

சுகாதார வைத்திய அதிகாரி Dr. நௌஷாத் முஸ்தபா அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான பாராட்டுப் பிரியாவிடை!

"ஒழுக்காரா கொள்க ஒருவன் தன்நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு" எனும் உயரிய சிந்தனைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் Dr. நௌஷாத் முஸ்தபா. எமது அலுவலகத்தின் வழிகாட்டியாகவும், அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்றியவருமான மதிப்பிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி (MOH) Dr. நௌஷாத் அவர்களின் பணி ஓய்வு நாள் விழா, அண்மையில் அலுவலகத்தில் மிக விமரிசையாகவும், நெகிழ்ச்சியாகவும் நடைபெற்றது.


மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி (AMOH) Dr. நிஸ்ரீன் ஸியாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மார்பு நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. A. L. A. கபூர் மற்றும் Dr. A. H. M. D. மாபாஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். பொதுச் சுகாதார பரிசோதகர் தினேஷ் அவர்கள் நிகழ்ச்சியை மிக நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார்.


இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், ஓய்வுபெறும் வைத்திய அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களான அவரது பாரியார், மகள், மகன் Dr. அஹ்சன் மற்றும் மருமகள் ஆகியோரின் வருகை விழாவிற்கு மேலும் கௌரவத்தையும் மெருகையும் ஊட்டியது. சக உத்தியோகத்தர்களின் வாழ்த்துரைகளுடன், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஃபைலான் நலீம் அவர்களின் தொகுப்பில் உருவான "நிழல் தந்த நினைவுகள்" (SPHI Diary) எனும் சிறப்புப் பதிப்பு இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.


நிகழ்வின் சிறப்பம்சமாக, பாராட்டுப் உரைகள் மற்றும் வாழ்த்துப்பா வாசித்தல் இடம்பெற்றன. தொடர்ந்து அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. உத்தியோகத்தர்களின் உள்ளம் தொடும் பிரியாவிடை உரைகள் அனைவரையும் நெகிழச் செய்ததோடு, மகிழ்ச்சியுடன் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் பரிமாறப்பட்டன.


விழாவின் நிறைவாக மதிய போசனம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அனைத்து உத்தியோகத்தர்களும் அணிவகுத்துச் சென்று Dr. நௌஷாத் அவர்களை அவரது இல்லம் வரை அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்தனர். அவரது இல்லத்திலும் சிறப்பான சிற்றுண்டி உபசாரத்துடன் அன்பும் மரியாதையும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஓய்வு என்பது பணியின் முடிவுதானே தவிர, அனுபவங்களின் முடிவு அல்ல என்பதை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.


தகவல் - MOH Sammanthurai. 










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe