(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில், மத்திய மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களங்களின் ஏற்பாட்டில் 83 பயனாளிகளுக்கான சுமார் 2.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலான நலத்திட்டங்கள் வழங்கும் வாழ்வாதார உதவி நிகழ்வு நேற்று (12) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனிபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எஸ். கரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அத்துடன், கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல். மஹ்ரூப், உதவி பிரதேச செயலாளர் வி. வாசீத் அஹமட், கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் கே. சிவகுமார், மத்திய மற்றும் மாகாண சமூக சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம்.எம். சாபீர், ஏ. அகமட் சபீர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும், பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது தகுதியான பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்கான உதவித்தொகை, புதிய மின்சார இணைப்புக்கான உதவி, கல்வி ஊக்குவிப்புத் தொகை, அங்கவீனர் மாதாந்த கொடுப்பனவு மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு மற்றும் மருத்துவப் பயணக் கொடுப்பனவுகள், காது கேட்கும் கருவிகள், நடை சட்டங்கள் மற்றும் அனுகும் வசதிகள் எனப் பல்வேறுபட்ட வாழ்வாதார நலத்திட்ட உதவிகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய அதிகாரிகள், மக்களை நேரடியாக அழைத்து மிகவும் வெளிப்படையான முறையிலும், நேர்த்தியான ஒழுங்கமைப்போடும் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் முன்மாதிரியான செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

