(சர்ஜுன் லாபீர்)
ஜனாதிபதி நிதியத்தின் 2025ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய உதவித் திட்டங்களின் புகைப்படங்கள் மற்றும் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றிருப்பது எமக்கு பெருமைக்குரிய விடயமாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக அதிகளவான உதவித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேச செயலகங்களில் ஒன்றாக சம்மாந்துறை பிரதேச செயலகம் திகழ்கிறது. இதன் மூலம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் நேரடியாக நன்மையடைந்துள்ளன.
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இதுவரை 22 பேருக்கு மருத்துவ உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கல்வி ஊக்குவிப்பு உதவிகள், வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள் மற்றும் ஏனைய நலத்திட்ட உதவிகள் என மேலும் 16 பயனாளிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமாக 38 பயனாளிகள் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
இந்த உதவித் திட்டங்கள் மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவாக அமைந்துள்ளன. குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவிகள் பல குடும்பங்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சாதனைகள் அனைத்தும் ஜனாதிபதி நிதியத்தின் வழிகாட்டலுடனும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையிலும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையினாலும் சாத்தியமானதாகும்.
எதிர்காலத்திலும் மிகவும் தேவையுடைய மக்களை இனங்கண்டு, ஜனாதிபதி நிதியத்தின் உதவிகளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சம்மாந்துறை பிரதேச செயலகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, சமூக முன்னேற்றத்திற்கும் மக்களின் நலனிற்கும் தனது பங்களிப்பை வழங்கி வருவதை இத்தருணத்தில் பெருமையுடன் குறிப்பிடுகின்றோம்.

