Ads Area

சம்மாந்துறையில் கடந்த 10 நாட்களில் 5 டெங்கு நோயாளர்கள் அடையாளம்: சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அவசர எச்சரிக்கை!

 மஜீட். ARM 


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 5 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளனர்.


​அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் அனைவரும் மேல் மாகாணத்திற்குத் தொழில், உயர்கல்வி மற்றும் சுற்றுலா நிமித்தம் பயணம் மேற்கொண்டுவிட்டு அண்மையில் சம்மாந்துறைக்குத் திரும்பியவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 


தற்போது சம்மாந்துறைப் பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சாதகமான காலநிலைச் சூழல் காணப்படுவதால், இந்த வைரஸ் ஒட்டுமொத்தப் பகுதிக்கும் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


டெங்கு வைரஸைப் பரப்பும் 'Aedes' வகை நுளம்புகள் பொதுவாகப் பகல் வேளையிலேயே அதிகம் கடிக்கும் இயல்புடையவை என்பதால், பொது மக்கள் பகல் நேரங்களில் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


​இது குறித்து சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி (MOH)  (Dr. Mrs. Nisreen Ziyadh) விடுத்துள்ள அவசர வேண்டுகோளில், பொதுமக்கள் அனைவரும் தத்தமது வீட்டு வளாகங்கள் மற்றும் தமக்குச் சொந்தமான வெற்று வளவுகளை நுளம்புகள் பெருகாத வண்ணம் மிகச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், நீர் தேங்கக்கூடிய டயர்கள், சிரட்டைகள், உடைந்த கொள்கலன்கள் போன்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், நம் சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் சமூகப் பொறுப்பாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


​இதேவேளை, இந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வை முன்னிட்டு நேற்றும் இன்றும் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம்  மற்றும் அல்-அர்ஸாத் மகா வித்தியாலயம்  ஆகியவற்றில் விசேட சிரமதானப் பணிகள் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.


எனவே, சம்மாந்துறை மக்கள் அனைவரும் இன்றே விழிப்படைந்து, நம்மைச் சுற்றியுள்ள இடங்களைச் சுத்தம் செய்து, டெங்கு இல்லாத ஆரோக்கியமான சம்மாந்துறையை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe