Ads Area

சம்மாந்துறையில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் முதல் நாள் வேலைத்திட்டம் விமரிசையாக ஆரம்பம்!


சம்மாந்துறை அன்சார்.


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு முதலாம் நாள் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகிய திணைக்களங்கள் ஒன்றிணைந்து இவ்வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.


இவ்வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள பொது இடங்களில் தீவிர டெங்கு நுளம்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், ஆங்காங்கே தேங்கிக்கிடந்த கழிவுகளை அகற்றி சூழலைத் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு டெங்கு நோய் பரவலைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊட்டும் செயற்பாடுகளும் இதன்போது வெற்றிகரமாக நடாத்தப்பட்டன.


இவ் ஆரம்ப நாள் நிகழ்விலும் களப்பணிகளிலும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி நிஸ்ரின் சியாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மேலும், சம்மாந்துறை பிரதேச சபைச் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பஸ்லான் நளீம், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உட்பட பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டு பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe