பாறுக் ஷிஹான்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டப்பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை (17) அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்குறித்த அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைப்புதைத்து, மறைத்து வைத்துள்ளதான சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த காணியில் மண்ணகழ்வு பக்கோ இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு தடயப்பொருளும் கிடைக்கவில்லை என்பதுடன் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த பகுதியில் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருந்து வந்துள்ளதுடன், அக்காலகட்டத்தில் புலிகளின் போக்குவரத்து மார்க்கமாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி, கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார், சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதீப் குமார, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், அம்பாறை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப்ப்பணி இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 12 மணி வரை மேற்கொண்ட போதும், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனத்தெரிவிக்கப்படுகிறது.
அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து அனைவரும் வெளியேறிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.





