வீட்டிலிருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேனில் கடத்திச்சென்று துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை (04) முறைப்பாடும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம்.சுவர்ணகாந்தி, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ.ஆதம்பாவா மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் வெள்ளிக்கிழமை (05) அன்று குறித்த வழக்கானது மன்றில் விசாரணைக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை சந்தேக நபரான இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கல்முனை மாநகரப்பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க சிறுமி (பாடசாலையை விட்டு இடைவிலகியவர்) தனது தாயுடன் ஆடை கொள்வனவிற்காக சென்றுள்ளார்.
இவ்வாறு ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞனுக்கும் அங்கு சென்ற சிறுமிக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டு தொலைபேசி இலக்கம் பரிமாறப்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் 2 மாதங்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATAPPS ) தொடர்பில் இருந்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் தான் குறித்த இளைஞன் கடந்த புதன்கிழமை (03) இரவு 11.30 மணியளவில் வாடகைக்கு பெறப்பட்ட வேனொன்றுடன் தான் பணியாற்றிய ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மற்றுமொரு 56 வயது மதிக்கத்தக்க நபரையும் வேனின் சாரதியாக அழைத்துக் கொண்டு சிறுமி தங்கி இருக்கின்ற வீட்டிற்குச்சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தொலைபேசியூடாக அழைத்த அவ்விளைஞன் முகவரியொன்றினைக் காட்டுமாறு கூறியுள்ளார். அப்போது வீட்டிலிருந்து வீதிக்கு வந்த சிறுமியை சந்தேக நபரான இளைஞன் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் வாயைப்பொத்தி வேனில் அம்பாறை மாவட்டத்திலுள்ள மத்திய முகாம் பிரதேசத்திற்கு கடத்திச்சென்றுள்ளார்.
அங்கு அழைத்துச்செல்லப்பட்ட குறித்த சிறுமி பாழடைந்த வர்த்தக்கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலில் சந்தேக நபரான இளைஞன் சிறுமியைத்துஸ்பிரயோகம் செய்துள்ளார். அதன் பின்னர் மற்றுமொரு சந்தேக நபரான 56 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து பின்னர் இரு சந்தேக நபர்களும் மாறி மாறி துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி அக்கரைப்பற்று பகுதிக்கு அச்சிறுமியை இறுதியாக அழைத்துச்சென்று விட்டுச்சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் சிறுமி அப்பகுதியால் வருகை தந்த பேரூந்தின் உதவியுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குச்சென்று தனக்கு நடந்த விடயங்களை உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தினை பெற்ற பொலிஸார் உடனடியாகச்செயற்பட்டு சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனைக்கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேக நபரான 2 பிள்ளைகளின் தந்தையான 56 வயது மதிக்கததக்க சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனையிலுள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறுமியை கடத்திச்செல்ல உதவிய வேன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுமியின் தாய் மனஅழுத்தம் காரணமாக வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றார். சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

