Ads Area

சம்மாந்துறையின் பெருமைமிகு சகோதரிகள்; மாகாணப் போட்டிகளில் அபார வெற்றி.

 ( செய்தியாளர் - மின்மினி மின்ஹா)


அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி – 2026 இன் மாகாண மட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள சம்மாந்துறை மாணவி ஒருவர் கல்வி வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றுள்ளார்.


மட்டக்களப்பிலுள்ள புனித மிக்கேல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்டப் போட்டிகளில், பிரிவு–3 அறிவிப்பாளர் நிகழ்ச்சியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) 10 ஆம் தர மாணவி முஹம்மட் பாயிஸ் ஸுஹா முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.


கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், 16 மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர், சம்மாந்துறை கல்வி வலயத்திலிருந்து தேசிய மட்டத்திற்குத் தெரிவான ஒரே மாணவியாகவும் திகழ்கிறார்.


மாணவி முஹம்மட் பாயிஸ் ஸுஹா ஏற்கனவே பல்வேறு கல்வி மற்றும் இணைப்பாடவிதானப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தரம்–5 புலமைப்பரிசில் பரீட்சையில் வலய மட்ட முதலிடத்தைப் பெற்றதுடன், தமிழ் மொழித் தினப் போட்டிகளின் வாசிப்பு, பேச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பங்கேற்று பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.


2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டியின் பேச்சு நிகழ்ச்சியில் மாகாண மட்ட முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் பங்கேற்றிருந்ததோடு, 2025 ஆம் ஆண்டு வாசிப்பு நிகழ்ச்சியில் மாகாண மட்ட மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தார். கணித ஒலிம்பியாட் மற்றும் ஆங்கில மொழித் தினப் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.


இம்முறை நடைபெற்ற அறிவிப்பாளர் போட்டிக்காக ஆசிரியரும் கவிஞருமான எம்.ஐ. ஆச்சி முகம்மட் மற்றும் ஊடகத்துறை சார்ந்த பிரபல அறிவிப்பாளர் சி.எம்.யூ. தாரிக் ஆகியோரின் பயிற்சி மற்றும் வழிகாட்டல்கள் கிடைத்திருந்தன.


இம்முறை நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில், அவரது குடும்பம் மேலும் ஒரு சாதனையைப் பதிவு செய்துள்ளது. மாணவி முஹம்மட் பாயிஸ் ஸுஹாவின் சகோதரியும் அதே பாடசாலையின் தரம்–06 மாணவியுமான முஹம்மட் பாயிஸ் தியாமன்ஹா, பிரிவு–01 பேச்சுப் போட்டி நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் மாகாண மட்டத்தில் சாதனை படைத்தமை பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.



இதனையடுத்து, மாகாண மட்ட வெற்றியைப் பாராட்டும் வகையில் மாணவியின் இல்லத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. மின்மினி மீட்சி சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகர் மின்மினி மின்ஹா தலைமையிலான குழுவினர் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவரது சாதனையைப் பாராட்டியும் கௌரவித்தனர்.



தேசிய மட்டப் போட்டியிலும் வெற்றி பெற்று சம்மாந்துறை கல்வி வலயத்திற்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் மேலும் புகழ் சேர்க்க வேண்டும் என இதன்போது வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe