Ads Area

சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கல்: வளரிளம் பருவ ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு!

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் தரம் 7, 8 மற்றும் 9 ஆகிய வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கான, கருப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான (HPV) தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் இன்று வெற்றிகரமாக வழங்கி வைக்கப்பட்டது.


பொதுவாக தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவிகளுக்கு இந்தத் தடுப்பூசி வழங்கப்படுவது வழமையாகும். எனினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட உலகளாவிய மற்றும் உள்நாட்டு தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, இந்த மாணவிகளுக்கான தடுப்பூசி வழங்கும் பணி சற்று காலதாமதமாகியிருந்தது. இந்தத் தட்டுப்பாடு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுபட்ட மாணவிகளை உள்ளடக்கி இந்த இரண்டாம் கட்டத் தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கு மிக முக்கியமான சுகாதார விழிப்புணர்வு உரை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) டொக்டர் திருமதி நிஸ்ரீன் ஜியாத் (Dr. Mrs. Nisreen Ziyadh) அவர்கள் இதில் கலந்துகொண்டு, வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியம் (Adolescent Health) மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு விரிவான சுகாதாரக் கல்வியை வழங்கினார்.


இதன்போது, வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள், முறையான ஊட்டச்சத்துப் பழக்கவழக்கங்கள் மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணலின் அவசியம் குறித்து சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) Dr. நிஸ்ரின் ஜியாத் மாணவிகளுக்கு விளக்கமளித்தார். அத்துடன், கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த HPV தடுப்பூசி எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.


இத்தடுப்பூசி வழங்கும் திட்டமானது பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலுடனும் வெற்றிகரமாக நிறைவுற்றது.


தகவல் - MOH Sammanthurai.

செய்தி - சம்மாந்துறை அன்சார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe