மஜீட். ARM
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது, கடுமையான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 10 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 05ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, பாதுகாப்பு தலைக்கவசம் இன்றி பயணித்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் செலுத்துதல், ஆபத்தான முறையில் அஜாக்கிரதையாக பயணித்தல் மற்றும் பொலிஸாரின் கட்டளையை மீறிச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ் அதிரடி சோதனையின் போது, பொலிஸாரின் போக்குவரத்து கடமைகளை கிண்டல் செய்யும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் வீடியோக்களை தயாரித்து டிக் டொக் (TikTok) சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் மோட்டார் சைக்கிள்களுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஓட்டுநர் உரிமம், வருமான வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதி சான்றிதழ் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசம் எதுவுமின்றியும், பொலிஸ் கட்டளையை பொருட்படுத்தாமலும் மிக ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் நேற்று (ஜூன் 08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவருக்கு 38,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களுக்கு எதிராக வரும் நாட்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தி அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்போரை கட்டுப்படுத்தவும் இத்தகைய அதிரடி சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

