( மின்மினி மின்ஹா )
அரசின் காணி பகிர்ந்தளிப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் e-SLIMS (E-State Land Information Management System) முறைமை தற்போது இலங்கையில் காணி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் நடவடிக்கைகளில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணி பகிர்ந்தளிப்பு, அனுமதிப்பத்திரம் வழங்கல், தரவுப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படை தன்மையான நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றை இலகுபடுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இம்முறைமை தொடர்பில் கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்களத்தின் முன்னாள் உதவி காணி ஆணையாளரும், சம்மாந்துறையைச் சேர்ந்தவருமான கே.எல்.எம். முஸம்மில் அவர்களுடன்..
கேள்வி:
e-SLIMS முறைமை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
பதில்:
2009ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தில் காணிகளுக்கான குத்தகை அறவீட்டு நடவடிக்கைகளினை இலகுபடுத்தும் நோக்கில் இந்த இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இதனை முழு நாட்டுக்கும் விரிவுபடுத்தும் வகையில் இதனை முறையான ICT நிறுவனத்தின் மூலம் 2014 / 2015ஆம் ஆண்டுகளில் மேலும் மேம்படுத்தல்கள் (Update) செய்யப்பட்டது.
கேள்வி:
இம்முறைமை மூலம் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்படுகின்றன ?
பதில்:
ஆரம்பத்தில் காணி குத்தகை அறவீட்டு (Lease Recovery) நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்த முறைமை, பின்னர் காணி பகிர்ந்தளிப்பு (Land Alienation), உத்தரவுப் பத்திரங்கள் (Permit) வழங்கல், அளிப்பு (Grant ) வழங்கல், அரச திணைக்களங்களுக்கு காணி (Handing Over) வழங்கல், பல்வேறு நோக்கங்களுக்காக நீண்ட கால குத்தகை (long term lease) வழங்குதல், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களுக்கு காணி (Vesting) வழங்கல் போன்ற நடவடிக்கைகளை முழுமையாக e- SLIMS முறைமை ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:
பொது மக்களுக்கு எவ் வகையில் காணிகள் வழங்கப்படுகின்றது?
பதில்:
பொதுமக்களுக்கு காணி பகிர்ந்தளிக்கும் போது பிரதானமாக இரண்டு சட்டங்கள் கையாளப்படுகின்றது. அதில் ஒன்று - காணி அபிவிருத்தி கட்டளை சட்டம் (Land Development Ordinance) மற்றையது அரச காணி சட்டம் (State Lands Ordinance) இவ்விரு சட்டங்களும் காணி பகிர்ந்தளிக்கும் நோக்கங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றது.
கேள்வி:
எவ்வாறு வேறுபடுகின்றது?
பதில்:
காணி அபிவிருத்தி கட்டளை சட்டம் (Land Development Ordinance) விசேடமாக உழவர் வகுப்பினருக்கு காணி வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் உழவர் வகுப்பினர்களுக்கு இலவசமான முறையில் காணி பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதேவேளை அவர்களுக்கான சில கட்டுப்பாடுகளும், வரையறைகளும் காணப்படுகின்றன.
கேள்வி:
உழவர் வகுப்பினர்கள் என யாரை வரையறுக்கிறீர்கள்?
பதில்:
வருடாந்த வருமானம் மூன்று இலட்சம் ரூபாவிற்கு குறைவாக உள்ளவர்களும் , மற்றும் தாமாகவே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவர்களே உழவர் வகுப்பினர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
மேலும் இவர்களுக்கு குடியிருப்பு தேவைக்காக 20 பேர்சஸ்க்கும் மேற்படாமலும், தோட்டத்துடன் கூடிய குடியிருப்புக்கு 80 பேர்ச்சஸ் வரைக்கும் - விவசாய நடவடிக்கைகளுக்காக ஒரு (01) ஏக்கரும் வழங்கப்படுகின்றது.
கேள்வி:
அரச காணி சட்டம் (State Lands Ordinance) யாருக்கு காணி பகிர்ந்தளிக்கப்படுகிறது?
பதில்:
உழவர் வகுப்பினர் தவிர்ந்த பல்வேறு தரப்பினருக்கும், பல்வேறு தேவைகளுக்கும்இந்தச் சட்டத்தின் கீழ் காணி வழங்கப்படுகிறது.
குறிப்பாக பாரிய முதலீட்டு நோக்கங்கள், தொழிற்சாலைகள் அமைப்பதற்கு, பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், நகர சபை மற்றும் மாநகர சபை எல்லைகளுக்குள் குடியிருப்போருக்கும், அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அதிகார சபைகள் ஆகியோருக்கு இந்தச் சட்டத்தின் கீழ் காணிகள் வழங்கப்படுகின்றன.
இங்கு காணிக்கான வரையறை இல்லை. குறித்த நோக்கத்துக்கு தேவைப்படுகின்ற அளவுகளுக்கு ஏற்ப இங்கு வழங்க முடியும்.
கேள்வி:
அரச காணிக்கான ஆவணம் ஒன்றை வழங்கும் போது அதற்கான படிமுறைகள் என்ன?
பதில்:
அரச காணித்துண்டு ஒன்றைப் பெறுவதற்கு நபர் ஒருவர் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்கும் போது, அது தொடர்பில் முதலில் பரிசீலிக்கப்படும். அவர் காணி அற்றவர் என்பதை உறுதி செய்து கொண்டு ; அவருக்கு பொருத்தமான காணி இருக்கும் பட்சத்தில் , காணிக் கச்சேரிக்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் மாகாண காணி ஆணையாளர் அல்லது மாகாணங்களுக்கிடைப்பட்ட காணி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து காணிக் கச்சேரி நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டதும். வழங்கப்பட்ட அனுமதிக்கமைவாக காணிக் கச்சேரி உரிய தினத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கு கொள்ளப்படும்.
அதற்கு அமைவாக ஆரம்ப தெரிவுப் பட்டியல் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட பட்டியல் இரு வார காலத்திற்கு ஆட்சேபனைகளுக்காக காட்சிப்படுத்தப்படும்.
ஆட்சேபனைகள் கிடைக்கப் பெறாவிடின் அல்லது கிடைக்கப்பெற்ற ஆட்சேபனைகளுக்கான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
அந்த இறுதிப் பட்டியலின் அடிப்படையில் அனுமதி பெற்று, தேவையான படிவங்கள் கோரப்பட்டு; அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.
அதன் பின்னர் நில அளவைத் திணைக்களத்திற்கு நில அளவை கோரிக்கை அனுப்பப்பட்டு காணியை நில அளவை செய்வதற்கு நடவடிக்கை செய்யப்படும்.
நில அளவைப்படம் கிடைத்த பின்னர், குடியிருப்பு காணி ஆயின் ஒரு வருட இருப்பாட்சியையும் (Possesion), விவசாயக் காணி எனின் மூன்று வருட ஆட்சியையும் நிரூபிக்கும் பட்சத்தில் காணி அளிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது முழுமையாக e -SLIMS ஊடாகவே நடைபெறுகின்றது. இங்கு உத்தரவுப் பத்திரம், அளிப்புப் பத்திரம் என்பவை இலத்திரனியல் முறையிலேயே அச்சிடப்படுகின்றது. மற்றும் அவற்றுக்கான இலக்கமிடல் கூட கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி:
அவ்வாறு உத்தரவு பத்திரங்கள், அளிப்புப் பத்திரங்களுக்கு எவ்வாறு இலக்கம் இடப்படுகிறது?
பதில்:
ஆமாம்: ஆரம்ப காலங்களில் உத்தரவு பத்திரங்களை வழங்கிய காணிக் கச்சேரிகள் மற்றும் பிரதேச செயலகங்கள் தமக்கான வசதிக்கேற்ப தனித்தனியான இலக்க முறைகளை பயன்படுத்தின. இதனால் மாவட்டங்களுக்கு மாவட்டம் மாறுபட்ட விதமான எழுத்து மற்றும் இலக்க அமைப்புகள் காணப்பட்டன. இதனால் e - SLIMS ஊடாக அளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் போது சில இடையூறுகள் காணப்பட்டன. அதேபோல் இலங்கை முழுவதும் ஒரே மாதிரியான தொடர் இலக்க முறையில் System ஊடாக ஒழுங்கு முறையில் இலக்கமிடும் போது பல்வேறு அசெளகரீகங்கள் ஏற்படுவதில் இருந்து தவிர்ந்து கொள்வதோடு, குறித்த இலக்கத்தைக் கொண்டு இலங்கையில் எப்பாகத்தில் இவ்வுத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதனை கூட அனுமானிக்க முடியும்.
கேள்வி:
e-SLIMS முறைமையின் முக்கிய நன்மைகள் என்ன?
பதில்:
e-SLIMS முறைமை அரச காணி நிர்வாகத்தை முழுமையாக நவீனமயமாக்கியுள்ளதுடன், பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
முக்கியமாக காணி தொடர்பான சேவைகள் காலதாமதமின்றி மேற்கொள்ளப்படும்.
மேலும்,தரவுகள் பாதுகாப்பு (Assurance) அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தகவல்களும் இலத்திரனியல் தரவுத்தளத்தில் பாதுகாப்பாக சேமிக்கப்படுவதால் எதிர்காலத்தில் ஏதாவது விசாரணைக்கு அல்லது தேவைகளுக்கு இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் மூலம் நேரம் மிகுதியாவதுடன், காகிதாதிகள் பயன்பாடு மிகவும் குறைவான நிலையிலேயே தேவைப்படுகின்றது. ஆவணங்களை பாதுகாப்பதற்காக பாரிய உபகரணங்களோ, பாரிய இடவசதியோ தேவையில்லை.
விசாரணைகளின் போது ஆவணங்கள் தொலைந்து போதல், ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஏற்படும் கால தாமதம் முற்றாக இல்லாமல் செய்யப்படுகிறது.
மேலும் e - SLIMS தொழில் நுட்பத்தினுடாக காணி கச்சேரி அனுமதிகள் வழங்கும் போது ஒவ்வொரு தனித்தனி காணித் துண்டங்களுக்கும் தனித்தனியாக KML File கோவைகள் இணைக்கப்பட்டுள்ளதால் காணியின் அபிவிருத்தி நிலை தொடர்பாக இணைய வசதியுடன் காணிகளை பார்வையிட முடியும். இதன் மூலம் வெளிப்படைத் தன்மை பேணப்படுவதோடு (Transperancy) , தனித் தனியாக காணிகளை கள பரிசோதனை செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. இதன்மூலம் மேலதிகாரிகளுக்கு நேரம் மீதமாவதோடு, எரிபொருள் செலவுத் தொகையும் சேமிக்கப்படும்.
அதேபோன்று :பொதுமக்களுக்கும் தாங்கள் காணி கோரி விண்ணப்பித்தமை தொடர்பில் குறுஞ் செய்திகள் (SMS) சேவை மூலம் தகவல் கிடைக்கப் பெறுவதால், தங்கள் விண்ணப்பம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நகர்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
அத்தோடு எதிர்காலத்தில் e - SLIMS முறைமையில் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் அரச காணி நிர்வாகம் மேலும் திறமையானதாகவும், வசதியானதாகவும், வெளிப்படைத் தன்மையுடையதாகவும், பொதுமக்கள் மிகவும் எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றம் பெறும் என்பதாகவும் தெரிவித்தார்.


