(சர்ஜுன் லாபீர்)
இலங்கையில் நிலவும் பன்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" எனும் புதிய தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இப் பாரிய செயற்திட்டம், கடந்த ஜூன் மாதம் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் இரண்டாவது நிகழ்வாக, சம்மாந்துறை மலையடிக் கிராமத்தின் நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பயனாளிகளுக்கான விசேட வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக, பாரம்பரிய கைத்தொழில்துறையை நவீனமயப்படுத்தி, பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆடைப் பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் ஒரு சிறு ஆடைத் தொழிற்சாலையை நிறுவுவதற்கும், அதற்கான இயந்திரங்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதற்குமான உத்தியோகபூர்வ அனுமதி மற்றும் கையளிப்புப் பத்திரம் இதன்போது குறித்த சங்கத்திடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், கிளீன் சிறிலங்கா செயற்திட்டத்தின் சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்பாளருமான வை.பி.எம். நவாஸ், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல். முஹம்மட் அஸ்லம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி குழுவின் தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.



