சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் ஆவணங்களைச் சரியாகப் பரிசீலனை செய்து, தகுதியான உரிய நபர்களுக்கு வீடுகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட செயலாளரின் விசேட பணிப்புரைக்கு அமைவாகவும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் ஆலோசன வழிகாட்டலின் பேரிலும், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல். முஹம்மது அஸ்லம் அவர்களின் முழுமையான பங்களிப்பு மற்றும் நெறிப்படுத்தலின் கீழ் இரு கட்டங்களாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இன்று காலை வேளையில் மல்வத்தை - 01, 02, 03, 04 மற்றும் வளத்தாப்பிட்டி - 02 (மல்லிகைத்தீவு) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான ஆவணப் பரிசீலனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் சம்மாந்துறை - 08, 10, 11, 12, உடங்கா - 01 மற்றும் வீரமுனை - 01, 02, 03, 04 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கான பரிசீலனைகள் முன்னெடுக்கப்பட்டன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உண்மையான பயனாளிகளுக்குச் சரியான ஆவணங்களின் அடிப்படையில் வீடுகள் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எம்.ஏ. அஸ்ரப், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம். முஸ்தபா, அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.என்.எம். சசீர், ஆர். சசிகரன் ஆகியோருடன் சமூக அபிவிருத்தி சபைகளின் தவிசாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உண்மையான பயனாளிகளுக்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் அல்லது அநீதிகளும் இன்றி, சரியான ஆவணங்களின் அடிப்படையில் வீடுகள் சென்றடைவதை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.






