செய்தி - சம்மாந்துறை அன்சார்.
தகவல் - சம்மாந்துறை MOH
தற்போது மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடிய தீவிர அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, நமது பகுதியிலிருந்து உயர்கல்வி, உத்தியோகம் மற்றும் சுற்றுலா நிமித்தம் மேல் மாகாணத்திற்குச் சென்றுவிட்டு, டெங்குக் காய்ச்சலுடன் ஊர் திரும்புபவர்கள் மூலம் நமது பிரதேசத்திலும் இந்நோய் பரவக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
எனவே, நமது ஊரின் பாதுகாப்பையும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில், பின்வரும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேல் மாகாணத்திலிருந்து டெங்குக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஊர் திரும்புபவர்கள், குறைந்தது இரண்டு வாரங்களுக்கு (14 நாட்கள்) பகல் வேளைகளில் நுளம்பு கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். டெங்கு நுளம்புகள் பொதுவாக பகல் நேரங்களிலேயே கடிக்கக் கூடியவை என்பதால், இந்நோயாளர்களைக் கடிக்கும் நுளம்புகள் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது.
பகல் வேளைகளில் நுளம்பு கடியிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
01. பகல் நேரங்களில் உடல் முழுவதையும் நன்றாக மூடக்கூடிய வகையிலான ஆடைகளை அணியுங்கள்.
02. நுளம்பு விரட்டி (Mosquito Repellent) கிரீம்கள் அல்லது லோஷன்களைப் பயன்படுத்துங்கள்.
உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி போன்ற டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அலட்சியமாக இருக்க வேண்டாம். சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, காலம் தாழ்த்தாது உடனடியாக அருகிலுள்ள மருத்துவ நிலையத்திற்குச் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
நமது பகுதியை டெங்கு இல்லாத Zone ஆக மாற்றுவதற்காக, பிரதேசத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகளும், நுளம்புக் களத் தடுப்பு நடவடிக்கைகளும் சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களாகிய நீங்களும் இந்தத் தகவலின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, முழுமையான ஒத்துழைப்பை வழங்கி விழிப்புணர்வுடன் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

