Ads Area

இருட்டறையில் விற்கப்படுகிறதா சம்மாந்துறையின் தலையெழுத்து? மஜ்லிஸ் அஷ்ஷூராவைப் பாதுகாக்க சம்மாந்துறை மக்களே விழித்தெழுங்கள்

கட்டுரை - ✍️Sabri Isma👷


சம்மாந்துறையின் மக்களின் அதியுயர் சபையான மஜ்லிஸ் அஷ்ஷூராவின் எதிர்காலத் தலைமைத்துவம் குறித்து ஒவ்வொரு சம்மாந்துறை மகனும் கட்டாயம் சிந்திக்க வேண்டிய நேரம் இது. அரசியல் சுயநலங்களுக்காகவும் தங்கள் பதவியாசைக்காகவும் எமது ஊரின் புனிதமான நிர்வாகம் இருட்டறையில் விலைபேசப்படுவதை நாம் அனுமதிக்கப் போகிறோமா?


எமது சம்மாந்துறைமஜ்லிஸ் அஷ்ஷூரா' (ஆலோசனை சபை) முஸ்லிம்களின் மார்க்க, சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வழிகாட்டலுக்கான மிக முக்கிய கட்டமைப்பாகும். ஆயினும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இச்சபையின் தலைமைப் பதவியான அமீர் தெரிவு ஆனது பொதுமக்களுக்கு எவ்வித அறிவிப்புமின்றி மிகவும் அமைதியாக தீர்மானிக்கப்படுவதாக எழும் விமர்சனங்கள் சமூக மட்டத்தில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளன.


சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூராவின் யாப்பு மற்றும் அதன் நோக்கங்களின் அடிப்படையில் இத்தலைமைப் பதவிக்கான தகுதிகள் மற்றும் தெரிவு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நாம் ஆராய்வது காலத்தின்தேவையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்  மஜ்லிஸ் அஷ்ஷூரா என்பது சம்மாந்துறை, மல்கம்பிட்டி, கொண்டவட்டுவான் ஆகிய பிரதேசங்களில் வாழும் சுமார் 77,000 முஸ்லிம்களையும், 09 ஜும்ஆப் பள்ளிவாசல்கள் உட்பட 54 பள்ளிவாசல்களையும் மார்க்க மற்றும் கலாச்சார நிறுவனங்களையும் தன்னுள் உள்ளடக்கிய அதியுயர் ஆலோசனை சபையாகும்.


1956 ஆம் ஆண்டின் வக்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய எமது பள்ளிவாசல்கள் மற்றும் அதன் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் மக்களின் மார்க்க மற்றும் லௌகீக தேவைகளை நிர்வகிப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு வலுவான கட்டமைப்பு இதுவாகும். 


சபையின் யாப்புப்  படி, மஜ்லிஸ் அஷ்ஷூராவின் அமீர் (தலைவர்) என்பவர் சம்மாந்துறையின் அதியுயர் சபையின் தலைவராக இருப்பதால் அவர் சம்மாந்துறை சமூகத்தின் தலைவராகவே (Social Leader)கணிக்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது  சுமார் 77,000  சம்மாந்துறை சமூகத்தின்பிரதிநிதியாக, சமூகத்தின் வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒருவரைத் தெரிவு செய்யும் போது அது முழுமையான வெளிப்படைத் தன்மையுடன்  நடைபெற வேண்டும்.


எமது ஊரில் ஒரு சாதாரண பாடசாலை அபிவிருத்திச் சபை (SDEC) அல்லது பழைய மாணவர் சங்க (PPA) கூட்டத்திற்குப் பள்ளிவாசல்களில் மைக் பிடித்து ஊருக்கே அறிவிப்புச் செய்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த சம்மாந்துறை மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும், பள்ளிவாசல்களின் அதியுயர் சபையான 'மஜ்லிஸ் அஷ்ஷூரா'வின் அமீர்  தெரிவு பற்றி எந்தவொரு பகிரங்க அறிவிப்பும் செய்யப்படுவதில்லை! 


இது எந்த வகையில் நியாயம்? 


பொதுச்சபை உறுப்பினர்களுக்கு அதாவது சுமார் ஒரு 130 பேர் மாத்திரம்  சொல்லி அதில் கூட்ட தினத்தில் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் இந்தத் தரக்குறைவான  தந்திர வேலைகள் உடனடியாக  உரியவர்கள் நிறுத்த வேண்டும்.


அமீர் தெரிவுக்கான திகதி  வரும் சனிக்கிழமை அதாவது 11.07.2026 ம் திகதி காலை 9.00 மணி என இரண்டு மாதங்களுக்கு முன் தீர்மானிக்கபட்டும் அந்த திகதியோ அல்லது அதன் நடைமுறைகள் முன்கூட்டியே சம்மாந்துறை மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எமது சாதாரண மக்கள் தங்களது குடி மரைக்காயர்களிடமும், பள்ளிவாசல் பிரதிநிதிகளிடமும் சென்று, "இவர்தான் எமது ஊருக்கான தலைவராக வர வேண்டும்" எனத் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க முடியும். 


மக்கள் விரும்பி ஏற்கும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தால்தான், அவர் இடும் கட்டளைகளுக்கு ஆலோசனைகளுக்கு மக்கள் கட்டுப்படுவார்கள். மூடிய அறைக்குள் நடக்கும் திணிப்புகளுக்கு ஊர் ஒருபோதும் அடிபணியாது என்பது உண்மை ஆகும்.

 

பொதுமக்களுக்கு முறையான அறிவிப்புக்கள் இன்றி ஒரு சிலருக்குள் மாத்திரம் இரகசியமான முறையில் (in the dark) அமீர் தெரிவு செய்யப்படுவது ஆனது அந்தப் பதவியின் கௌரவத்தையும் மக்கள் மத்தியில் அது கொண்டுள்ள நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்குகிறது. சமூகத்தின் தலைவரைத் தீர்மானிக்கும் உரிமை யாப்பினால் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு வழங்கப்பட்டிருந்தாலும் அத்தெரிவு நேர்மையாகவும், சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவரை முன்னிறுத்தியும் வெளிப்படையாக நடைபெறுவதே இஸ்லாமிய ஷூரா (ஆலோசனை) முறைமைக்கு வலுச்சேர்க்கும் செயல் ஆகும்.


எமது ஊரின் வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள் . மர்ஹூம் கண்ணியத்துக்குருய ஆலியார் ஹஸரத் அவர்கள் சம்மாந்துறையின் மஜ்லிஸ் அஷ்ஷூராவுக்குத் தலைமை தாங்கிய போது ஆலியார் ஹஸரத் அவர்களின்  தக்வா மற்றும் ஆளுமை காரணமாக முழு ஊரும் அவரை ஆயுட்காலத் தலைவராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மஜ்லிஸ் அஷ்ஷூராவின் கட்டளைகளுக்கு சம்மாந்துறை மக்கள் தலைவணங்கினர். அதன் பின் அஷ்-ஷெய்க் M.I.M. அமீர் அவர்களின் வழிகாட்டலிலும் மக்கள் தங்களால் முடிந்தவரை கட்டுப்பாட்டோடு நடந்தார்கள். தக்வாவும், மார்க்கப் பற்றுமே ஒரு தலைவனுக்கான உண்மையான தகுதி என்பதற்கு இதுவே சான்று இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்.

 

இன்றைய நிலைமையைப் பார்தால் மிகவும் வேதனையாக உள்ளது சிறிதளவேனும் மார்க்க அறிவோ, உலகியல் அறிவோ இல்லாத சில விஷமிகள் ஊர் நிர்வாக சபைகளுக்குள் நுழைந்து கொண்டு கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள். மிக மோசமான அசிங்கமான வார்த்தைகளால்  நம்பிக்கையாளர் சபை  தலைவர்கள் பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளை அவமதிக்கிறார்கள்.  இது நல்லவர்களை நிர்வாகத்திலிருந்து துரத்திவிட்டு, தங்களது எதிர்கால அரசியல் அசிங்கங்களுக்குப் பாதை அமைப்பதே இவர்களின் இந்த சதிதிட்டங்களின் மிக முக்கிய நோக்கம் ஆகும். இத்தகைய சுயநலமிகளை ஊர் நாம் எமது நிர்வாகத்திலிருந்தும், பள்ளிவாசல் நிர்வாகத்திலிருந்தும் நாம் முற்றாகத் துடைத்தெறிய வேண்டும். எமது உலமாக்களுக்கு எதிரான இவர்களின் சதிவலைகள் முறியடிக்கப்பட வேண்டும்.


எமது மஜ்லிஸ் அஷ்ஷூராவின் யாப்பினதும் அதன் பிரதான நோக்கத்தை  பின்வருமாறு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது:


"சம்மாந்துறை மற்றும் அதன் குறிப்பிட்ட எல்லைப்பரப்பில் வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரும் அல்-குர்ஆன், அல்-ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் என்பன குறிப்பிடும் இஸ்லாமிய சட்ட வரையறையின் அடிப்படையில் ஒரு சிறப்பான நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் அனைவரினதும் சன்மார்க்க, கல்வி, கலாச்சார, சமூக, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ளல்."


இந்த அடிப்படையான நோக்கம் நிறைவேற வேண்டுமானால் நமது சபையை வழிநடத்தும் அமீர் நிச்சயமாக குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகிய இஸ்லாமிய மூலாதாரங்களை ஆழமாகக் கற்றறிந்த ஒரு மார்க்க அறிஞராக அதாவது ஒரு மௌலவியாக கட்டாயம் இருக்க வேண்டும்.


 இஸ்லாமிய வரம்புகளுக்குள் நின்று சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், மார்க்க ரீதியான வழிகாட்டல்களை வழங்கவும் லௌகீகக் கல்வியை மட்டும் கற்றவர்களை விட, இஸ்லாமிய அறிவியலில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கே அதிக தகுதி உள்ளது. யாப்பின் நோக்கங்களை வெறுமனே வாசிப்பதை விட, அதனை நடைமுறைப்படுத்த தேவையான இஸ்லாமிய சட்ட நுணுக்கங்கள் ஒரு மௌலவிக்கே இயல்பாக அமைந்திருக்கும்.


தற்போதைய சூழ்நிலையில், மார்க்க அறிவற்ற சில தனிநபர்கள்  தங்கள் அமீர் பதவியைக் குறிவைத்து பொதுச்சபை உறுப்பினர்களின்  ஆதரவைப் பெறுவதற்காக வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வதாக அறிய முடிகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் போது, அவர்கள் உலமாக்களை விமர்சிப்பதும், தரக்குறைவாகப் பேசுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


பதவி ஆசைக்காகத் தங்களைத் தாங்களே முன்னிறுத்துவதும், அதற்காக மார்க்க அறிஞர்களைக் குறை கூறுவதும் இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு முற்றிலும் முரணானதாகும். 


மேலும் எமது உலமாக்களுக்கும் பொதுமக்களுக்குமான உறவைச் சீர்குலைக்கும் இத்தகைய நடவடிக்கைகள், மஜ்லிஸ் அஷ்ஷூராவின் சகல மக்களுடனும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்கான வழிகளை வகுத்தல் எனும் நோக்கத்தையே தோற்கடித்துவிடும். 


பிறரை விமர்சித்து பதவிக்கு வரத் துடிப்பவர்கள், நீதியாகவும் இஸ்லாமிய அடிப்படையிலும் சபையை நிர்வகிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.


மர்ஹூம் கண்ணியத்துக்குருய ஆலியார் ஹஸரத் அவர்கள்  விட்டுச் சென்ற அந்த ஆன்மீகத் தலைமையை மீண்டும் நிலைநிறுத்த, நாம் எதிர்காலத் தலைவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். மஜ்லிஸ் அஷ்ஷூராவின் 4 பிரதான பதவிகளில் குறைந்தது 1 அல்லது 2 பதவிகளுக்காவது எமக்கு தெரிந்த இளம் மற்றும் ஆற்றல்மிக்க உலமாக்களான.


அஷ்-ஷெய்க் முஹ்சின் மௌலவி ஹஸரத்

அஷ்-ஷெய்க் ரிஸ்வான் முப்தி ஹஸரத்

அஷ்-ஷெய்க் அஜ்வாத் ஹஸரத்

அஷ்-ஷெய்க் ரிப்கான் ஹஸரத்


போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி, எதிர்கால சம்மாந்துறையின் அமீர்களை நாம் இப்போதே தயார்படுத்த வேண்டும் அப்போதுதான் அதிகார பேராசை பிடித்த மனித ஜந்துகளிடம் இருந்து எமது ஊரையும் மக்களையும் பாதுகாக்க முடியும்.


சம்மாந்துறையின் மார்க்க வழிகாட்டல் என்பது ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். எனது தனிப்பட்ட பார்வையில் சம்மாந்துறையின்  அமீர் என்பவர் தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியிலிருந்து தெரிவு செய்யப்படுவது மிகவும் பொருத்தமானதாகும். இதன் மூலம் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூரா மற்றும் தப்லீகுல் இஸ்லாம் ஆகிய இரண்டும் ஒரே சீரான மார்க்க வழிகாட்டலில் பயணிக்க முடியும்.


ஒரு பொறுப்புள்ள சம்மாந்துறையானாக எனது கடமையை நான் செய்துவிட்டேன் என நம்புகிறேன் இந்தச் சதி திட்டத்தினை சம்மாந்துறை  மக்களாகிய உங்களிடத்தில் எத்தி வைத்திருக்கிறேன் . எமது அமீர் தெரிவுக்கு இன்னும் இருப்பது வெறும் மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே ஆகும். எனவே நீங்கள் உண்மையான ஒரு சம்மாந்துறையான் என்றால், இனிச் செய்ய வேண்டியது உங்கள் கடமை.


உடனடியாக உங்கள் பள்ளிவாசல் பிரதிநிதிகள்,குடி மரைக்காயர்கள், மற்றும் மதரஸா அதிபர்களைத் தொடர்புகொண்டு, 

"எங்கள் ஊரின் அமீராக ஒரு தகுதியான உலமா  மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" 

என ஆணித்தரமாக வலியுறுத்துங்கள்.


அருவருப்பான தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கும், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும் நமது சம்மாந்துறை பலியாவதற்கு முன், இந்தச் செய்தியை ஊரெங்கும் பகிருங்கள்! 


சம்மாந்துறையைக் காப்போம் எமது எதிர்கால சந்ததியினருக்காக.


சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூரா என்பது ஒரு தனிநபரின் அல்லது ஒரு குழுவின் அதிகார பீடமல்ல அது ஒட்டுமொத்த எமது சமூகத்தினதும்  வாழ்வை நெறிப்படுத்தும் புனிதமான அமைப்பாகும். எனவே, எதிர்வரும் காலங்களில் இச்சபைக்கான 'அமீர்' தெரிவு எவ்வித மறைமுகச் செயற்பாடுகளுமின்றி வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும். அத்துடன், குர்ஆன், சுன்னாவை அடிப்படையாகக் கொண்ட இச்சபையை வழிநடத்த, மார்க்க ஞானம் நிறைந்த, இறையச்சமுள்ள ஒரு மௌலவியே தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட வேண்டும். உலமாக்களை அவமதித்து, குறுக்கு வழியில் பதவிக்கு வர நினைக்கும் தவறான போக்குகளைப் பொதுச்சபை உறுப்பினர்கள் முறியடித்து, தகுதியான தலைமையைச் சம்மாந்துறைக்கு வழங்க முன்வர வேண்டும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe