Ads Area

34 வருட உன்னத சேவை நிறைவு: சம்மாந்துறை ஆரம்பப் பிரிவு ஆசிரியை றசூபா அப்துல் கபூர் ஓய்வு!

சம்மாந்துறையின் கல்விப்புலத்தில் பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த உன்னத ஆசிரியை றசூபா அப்துல் கபூர் அவர்கள், தனது 34 வருட கால அர்ப்பணிப்புமிக்க கற்பித்தல் பணியில் இருந்து கடந்த 2026.06.23 அன்று உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார். “ஒரு நல்ல ஆசிரியர், ஒரு குழந்தையை அவனது சொந்த உலகத்திற்குச் சென்றுதான் வழிநடத்த வேண்டும்" என்ற கூற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சம்மாந்துறையைத் தாயகமாகக் கொண்ட மதிப்பிற்குரிய ஆசிரியை றசூபா அப்துல் கபூர் ஆவார். ஆரம்பக் கல்வி மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும்போது, பிள்ளைகளின் உலகத்திற்கே சென்று, தானும் ஒரு குழந்தையாக மாறி, அளவற்ற அன்போடு அறிவூட்டிய இவரது சேவை சம்மாந்துறை மண்ணில் பெரும் பாராட்டுக்குரியதாகும்.


1992 ஆம் ஆண்டு சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரிய கல்விப் பயணத்தைத் தொடங்கிய இவர், 1996 – 1997 காலப்பகுதியில் அட்டாளச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிப் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தார். அதன் பின்னர், இவரது நீண்ட சேவைப் பயணத்தில் 1998 – 2003 காலப்பகுதியில் மீண்டும் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவு ஆசிரியராகக் கடமையேற்று, பிஞ்சு உள்ளங்களுக்குப் பேரன்போடு வழிகாட்டினார்.


தொடர்ந்து 2004 – 2005 காலப்பகுதியில் சம்மாந்துறை கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று, அங்கும் தனது நேர்த்தியான பணியைத் தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து 2005 – 2010 காலப்பகுதியில் மீண்டும் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தனது காத்திரமான சேவையை வழங்கிய இவர், 2011 – 2018 காலப்பகுதியில் சம்மாந்துறை நெய்நாகாடு கிராமத்தில் அமைந்துள்ள சம். அல் அக்ஸா வித்தியாலயத்தில் சுமார் 7 வருடங்கள் பணிபுரிந்து, அப்பிரதேச மாணவர்களின் கல்வித் தரம் உயரப் பெரும் உழைப்பை நல்கினார். அதன் பின்னர், 2018 முதல் 2026 வரை சம்மாந்துறை மபாஸா வித்தியாலயத்தில் தனது இறுதி அத்தியாயத்தைச் செவ்வனே நிறைவு செய்து, கடந்த ஜூன் மாதம் தனது உத்தியோகபூர்வ ஓய்வைப் பெற்றுக்கொண்டார்.


அன்பிற்குரிய றஷீபா ஆசிரியை வகுப்பறைக்குள் நுழைந்ததும், ஆசிரியராக இருக்கும் தன் முதிர்ச்சியைத் தற்காலிகமாய் மறந்து, பிஞ்சுக் குழந்தைகளோடு குழந்தையாக மாறி, விளையாட்டின் ஊடாகவும் பேரன்பின் ஊடாகவும் புகட்டிய கல்வியானது, பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வுக்கு ஆழமான அஸ்திவாரமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. கதீஜா உம்மா, தம்பி லெப்பை ஆகியோரின் மூத்த மகளான இவர், சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகவும், போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றி, தற்போது ஓய்வுநிலை ஆயத்த விடுமுறையில் இருக்கும் திரு. இஸ்மாலெப்பை அப்துல் கபூர் அவர்களின் அன்பு மனைவியும், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் விஞ்ஞான பாட ஆசிரியர் இணைப்பாளர் திரு. தம்பிலெப்பை ரைசுதீன் அவர்களின் அன்புச் சகோதரியுமாவார்.


இவரது உன்னதமான கல்விச் சேவைக்குக் கிடைத்த இறை ஆசீர்வாதமாக, இவருடைய மூன்று பிள்ளைகளும் இன்று மிகச்சிறந்த நிலையை அடைந்துள்ளனர். மூத்த மகள் மருத்துவ ஆய்வுகூடத் துறையிலும், இரண்டாவது பிள்ளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிர்முறை தொழில்நுட்ப பீட மாணவியாகவும் சிறந்து விளங்குகின்றனர். அதேவேளை, இவரது மூன்றாவது பிள்ளை அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிர்முறை தொழில்நுட்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 8ஆம் இடத்தினைப் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டு குடும்பத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.


மண்ணுக்கும், மாணவர் சமுதாயத்திற்கும், தனது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்த றஷீபா ஆசிரியை அவர்களின் இந்த ஓய்வுகாலம், மன அமைதியும், பூரண ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், குடும்பத்தினருடனான மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு, உங்களின் இந்த அர்ப்பணிப்புமிக்க சேவைக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe