Ads Area

41 வருட பொலிஸ் சேவைக்கு நிறைவு: சம்மாந்துறையின் மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ. கபூர் ஓய்வு!

தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் சமூகத்தின் அமைதிக்காகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த சம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த பொலிஸ் உத்தியோகத்தர் பிரதம பொலிஸ் பரிசோதகர் (Chief Inspector of Police) ஐ.எல்.ஏ. கபூர் அவர்கள் தனது 41 வருட கால மகத்தான பொலிஸ் சேவையிலிருந்து  (2026) தனது உத்தியோகபூர்வ சேவையை நிறைவுசெய்து ஓய்வு பெறுகின்றார். 


1966ஆம் ஆண்டு சம்மாந்துறை மண்ணில் பிறந்த இவர் தாய்நாட்டிற்கும் தனது சொந்த மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தனது நீண்டகாலச் சேவையை நிறைவு செய்துள்ளார். குறிப்பாக 1985ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண பயங்கரவாதச் சூழ்நிலைகள் காரணமாக முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம் வாழ்வாதாரம் மற்றும் குடும்பக் கட்டமைப்புகள் பாரிய சவால்களை எதிர்நோக்கியிருந்தன.


அந்த இக்கட்டான காலகட்டத்தில் தேசத்தைப் பாதுகாக்கவும் வாழ்வாதாரங்களை இழந்து நின்ற தனது சமூகத்திற்கு அரணாக நிற்கவும் வேண்டிய வரலாற்றுத் தேவை உருவானது. அந்தச் சமூகப் பொறுப்புணர்வினாலும் குடும்பச் சூழலினாலும் பொலிஸ் துறைக்குள் அடியெடுத்து வைத்த இவர் 1985.08.01 ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தராக ஆக உள்வாங்கப்பட்டு கிராந்தர் கோட்டை பொலிஸ் கல்லூரியில் பயிற்சி பெற்று பயங்கரவாத காலத்தில் கல்குடாவில் தனது முதலாவது நியமனத்தைப் பெற்றதுடன் மட்டக்களப்பு கல்முனை சம்மாந்துறை அம்பாரை ஆகிய பிரதேசங்களில் பணிபுரிந்து பின்னர் உதவிப் பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector)  நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து மகியங்கனை வியாழினி பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று 1990.02.20ஆம் திகதி உதவிப் பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்று அம்பாரை இரத்தினபுரி மொனராகலை பதுளை ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து 2010.02.08ஆம் திகதி பொலிஸ் பரிசோதகராக (Inspector Of Police) பதவி உயர்வு பெற்று சியம்பலான்டுவ தனமல்வில மொனராகலை மககலுகொல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் பொறுப்பதிகாரியாக தொழிற்பட்டு பின்னர் 2020.02.08ஆம் திகதி பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றார்.


அதன் பின்னர் மத்திய முகாம் நீலாவனை பண்டாரதுவ மற்றும் சவளக்கடை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பதில் பொறுப்பதிகாரியாகவும் போக்குவரத்தப் பிரிவு பொறுப்பதிகாரியாவும் கடமையாற்றி 2026.07.20ஆம் திகதியுடன் மக்களின் அன்பையும் மேலதிகாரிகளின் மதிப்பையும் வென்றெடுத்த நிலையில் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார்.


அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவிற்கான விசேட பயிற்சியை நிறைவு செய்த மிகச்சில அதிகாரிகளில் ஒருவரான இவர்; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான பரீட்சையிலும் அம்பாறை மாவட்டத்தில முதன்மைச் சித்தி பெற்று தனது திறமையை நிரூபித்திருந்தார்.


அப்துல் றஹ்மான் அவ்வா உம்மா மற்றும் அலியார் இஸ்மாலெப்பை ஆகியோரின் எட்டுப் பிள்ளைகளில் ஏழாவது பிள்ளையான இவர் பொலிஸ் சேவையில் ஒன்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார். அந்தவகையில்


1. FIRST AID MEDAL

2. POORNABHUMI PADDAKKAMA 1985

3. MEDAL FOR MERITORIOUS SERVICE

4. POLICE LONG SERVICE AND GOOD CONDUCT MEDAL

5. 125TH POLICE ANNIVERSARY MEDAL (1866-1991)

6. 150TH POLICE ANNIVERSARY MEDAL (1866-2016)

7. 50TH INDEPENDENCE ANNIVERSARY (1948-1998)

8. EAST HUMANITARIAN OPERATION MEDAL 2006-07-28 - 2007-07-10

9. SEWABHIMANI PADDAKKAMA SERVICE MEDAL 2009

கதீஜா உம்மா தம்பி லெப்பை அகியோரின் மூத்த மகளான ஓய்வு நிலை ஆசிரியை றஷ_பா அவர்களை கரம்பிடித்த இவரது உன்னதமான சேவைக்குக் கிடைத்த இறை ஆசீர்வாதமாக இவருடைய மூன்று பிள்ளைகளும் இன்று மிகச்சிறந்த நிலையை அடைந்துள்ளனர்: மூத்த மகள் மருத்துவ ஆய்வுகூடத் துறையிலும் இரண்டாவது பிள்ளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிர்முறை தொழில்நுட்ப பீட மாணவியும் மூன்றாவது பிள்ளை அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிர்முறை தொழில்நுட்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 8ஆம் இடத்தினைப் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


தனது 41 ஆண்டு கால சேவையில் எவ்வித கறையுமின்றி மக்களுக்கான சேவையையே முதன்மையாகக் கொண்டு கடமையாற்றிய சம்மாந்துறையின் பெருமைக்குரிய மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ. கபூர் அவர்களுக்கு அவரது ஓய்வுக்காலம் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக அமைய நெஞ்சார வாழ்த்துகின்றோம்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe