Ads Area

சம்மாந்துறை விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

 ( மின்மினி  மின்ஹா)



சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தை நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்றுவதற்கும், விதை உற்பத்தி மற்றும் நெல் சேமிப்பிற்கான பாதுகாப்பான களஞ்சியசாலையை அமைப்பதற்கும் அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ அதிதியாக கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை ஒருங்கிணைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான வை.பீ.எம். நபாஸ் வலியுறுத்தினார்.



அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. டீ.எம்.எஸ்.பீ. திசாநாயக்க தலைமையில், சம்மாந்துறை நெல்லுச் சேனைக் கண்டம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கிழக்கு மாகாண விவசாய வீதி திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 



சம்மாந்துறை வலய உதவி விவசாயப் பணிப்பாளர் திரு. எஸ். பரமேஸ்வரன் வழிகாட்டலிலும், சம்மாந்துறை கிழக்கு விவசாயப் போதனாசிரியர் திரு. ஏ.எச்.பீ. ராஜ கருணா ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாயத் துறை அமைச்சின் செயலாளர் ஜனாப் ஏ.எல்.எம். அஸ்மி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ். ரினோஸ் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.



விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் பல்வேறு அதிகாரிகள் சம்மாந்துறை விவசாயப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சிறு தொழில்கள் மற்றும் விவசாய அபிவிருத்திக்காக உரம் மற்றும் விவசாய உபகரணங்கள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் நபாஸ் குறிப்பிட்டார்.



அரசாங்கம் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உர மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் ரூபாவிலிருந்து 30 ஆயிரம் ரூபாவாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையெனத் தெரிவித்த அவர், குறைந்தது 25 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் உற்பத்தியை பாதுகாப்பாக சேமிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



மேலும், மாவட்ட மற்றும் பிரதேச விவசாய அதிகாரிகள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்ட அவர், இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் விவசாயப் போதனாசிரியர்களும், கடும் சிரமங்களுக்கு மத்தியில் உழைக்கும் விவசாயிகளும் சமூகத்தின் உயரிய மரியாதைக்கு உரியவர்கள் என்றும் தெரிவித்தார்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe