Ads Area

மனிதர்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இந்த அயோக்கியத்தனம் எப்போதுதான் முடிவுக்கு வரும்?

வவுனியாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த அதிர்ச்சித் தகவல், ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் கொதிப்படையச் செய்துள்ளது!


வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் (கதிரேசு வீதிக்கு திரும்பும் சந்தி) இயங்கி வரும் ஒரு கோழி இறைச்சிக் கடையில், நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அநாகரிகமும் அக்கிரமமும் அரங்கேறியுள்ளது. மனிதர்கள் பயன்படுத்தும் மலசலகூடத்திலும், அதனுடன் இணைந்த குளியலறைப் பகுதியிலும்தான் விற்பனைக்கான கோழிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமன்றி, அதே மலசலகூடப் பகுதியில்தான் கோழிகள் உரிக்கப்பட்டு, எந்தவித சுகாதார உணர்வும் இல்லாமல் நீண்டகாலமாக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது!


நாமும் நம் பிள்ளைகளும் ஆசையாக வாங்கி உண்ணும் இறைச்சி, இவ்வளவு கேவலமான, கிருமிகள் நிறைந்த ஒரு சூழலில் இருந்தா வருகிறது? நினைத்தாலே குமட்டல் எடுக்கிறது!


ஒரு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது, கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் பொலிஸாரும் இணைந்து சோதனையிட்டிருக்காவிட்டால், இந்த மலசலகூட இறைச்சிக் கடை இன்னும் எத்தனை காலம் மக்களை ஏமாற்றி நோயாளிகளாக்கியிருக்கும்?


நாம் காசு கொடுத்து வாங்கும் உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவது நம் உரிமை. கடைகளின் உட்பகுதியை ஒருமுறை உற்று நோக்குங்கள். சுகாதாரமற்ற முறையில் இறைச்சி கையாடப்படுவது தெரிந்தால், தயங்காமல் தட்டிக்கேளுங்கள்.


பொதுமக்களின் ஆரோக்கியத்தை அடகு வைத்து காசு பார்க்கும் இது போன்ற கடை உரிமையாளர் மீது சுகாதாரப் பரிசோதகர்கள் உடனடியாக, எவ்வித சமரசமும் இன்றி நீதிமன்றத்தின் ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற அசுத்தம் பிடித்த கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்பட வேண்டும்!


இனிமேலும் அதிகாரிகள் தங்கள் கடமைகளில் அலட்சியமாக இருக்கக் கூடாது. மக்கள் உயிரோடு விளையாடும் இதுபோன்ற 'வியாபார மிருகங்களை' சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிடைக்கும் நீதி!


அன்சார்.

சம்மாந்துறை.

2026-07-14








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe