Ads Area

சம்மாந்துறை ஹிஜ்ரா பொதுச் சந்தையின் மேல்மாடியைத் தங்குமிட வசதியாக மாற்றுவது குறித்தான தெளிவுபடுத்தல்!

அண்மையில் சம்மாந்துறை பிரதேச சபையின் 5ஆவது சபையின் 14ஆவது அமர்வில், எமது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹிஜ்ரா பொதுச் சந்தையின் மேல்மாடிப் பயன்பாடு மற்றும் சபையின் வருமானத்தைப் பெருக்குவது குறித்த ஒரு முக்கிய முன்மொழிவை நான் முன்வைத்திருந்தேன்.


இத்திட்டம் தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியிலும், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலவிதமான கருத்துக்களும் சந்தேகங்களும் எழும்பியுள்ளன. பொதுமக்கள் அனைவருக்கும் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தி, இத்திட்டத்தின் பின்னணியில் உள்ள நல்நோக்கத்தையும் நடைமுறைச் சாத்தியங்களையும் விளக்குவது எனது கடமையாகும்.


ஏன் இத்திட்டம் அவசியம்? தற்போதைய நிலைமை என்ன?


ஹிஜ்ரா பொதுச் சந்தையின் மேல்மாடியில் உள்ள அறைகளுக்காக மூன்று முறை டெண்டர் (Tender) கோரப்பட்டும், அங்கு போதிய வாடிக்கையாளர் வருகை இல்லாத காரணத்தால், அந்த அறைகளை வாடகைக்கு எடுக்க எந்தவொரு வர்த்தகரும் முன்வரவில்லை. இதனால் பல அறைகள் பயன்பாடின்றியும், பூட்டிய நிலையிலும் காணப்படுகின்றன. இதனால் எமது பிரதேச சபைக்குச் சேரவேண்டிய பொருளாதாரப் பயன் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


அவசரத் தேவைகளுக்கும் பாதுகாப்புக்கும் ஒரு தீர்வு:


எமது சம்மாந்துறை நகரம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு தேவைகளுக்காகவும் அவசர நிமித்தமாகவும் வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமானோர் எமது நகருக்கு வந்து செல்கின்றனர்.


ஆனால், அவர்கள் அவசரத்திற்கு ஒரு இரவு தங்கிச் செல்வதற்குக்கூடப் பாதுகாப்பான, தரமான தங்குமிட வசதி எமது ஊரில் இல்லை என்பதே உண்மை. குறிப்பாக எமது ஊருக்கு விவசாயச் செயல்பாடுகளுக்காக வருபவர்கள் தங்க இடமின்றிப் பாதையோரங்களில் தூங்கும் அவல நிலையையும் நாம் காண்கிறோம். இவ்வாறு எமது ஊருக்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளோடு கூடிய ஒரு தங்குமிடத்தை ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பது எமது சபையின் கட்டாயக் கடமையாகும்.


இது ஓய்வு விடுதி அல்ல; அத்தியாவசியச் சேவை!


இங்கு நாம் அமைக்கத் திட்டமிடுவது சொகுசு ஓய்வு விடுதி (Holiday Resort) அல்ல. மாறாக, அவசரத் தேவைகளுக்காகவும் இரவு நேரங்களில் மட்டும் வந்து தங்கிச் செல்வதற்குமான அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு அவசரத் தங்குமிட அமைப்பாகும் (Urgent Transit Accommodation).


இவ்வாறு வருபவர்கள் நிச்சயமாக இரவு 07:00 மணிக்கு பின்னரும், காலையில் 06:00 மணிவரையும்தான் இதைப் பயன்படுத்துவார்கள். இதனால் இங்கு வாகன தரிப்பிடப் பிரச்சினை எதுவும் எழ வாய்ப்பில்லை. எனவே, சந்தையின் மேல்மாடி இதற்கு மிகவும் பொருத்தமான மற்றும் போதுமான இடமாக அமையும்.


நடைமுறைப்படுத்தல் மற்றும் சட்ட ரீதியான நடைமுறைகள்:


இப்பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டாலும், இந்த இடம் வர்த்தமானி அறிவித்தலின்படி சந்தைக்குச் சொந்தமான கடைகளாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முதலில் கௌரவ ஆளுநர் அவர்களின் முறைப்படியான அனுமதியைப் பெற்று, அதன்பின்னர் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்த பிறகே இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது அனைத்துச் சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கும் உட்பட்டே முன்னெடுக்கப்படும்.


இதனால் ஊருக்குக் கிடைக்கும் நன்மைகள்:


01. பாதுகாப்பான சேவை: வெளியூர்களிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக வருபவர்களுக்குச் சபையின் மூலமாகச் சுத்தமான, பாதுகாப்பான தங்குமிடம் கிடைக்கும்.


02. பிரதேச சபைக்கு நிலையான வருமானம்: பூட்டிக்கிடக்கும் பொதுச்சொத்துக்கள் மூலம் எமது பிரதேச சபைக்கு மாதாந்தம் பல மடங்கு மேலதிக வருமானம் கிடைக்கும்.


03. பொதுச்சொத்தின் பாதுகாப்பு: முழுமையாகப் பயன்படுத்தப்படாத பொதுச்சொத்து, ஊரின் வளர்ச்சிக்கு உதவும் பொருளாதார வளமாக மாறும்.


04. வர்த்தகர்களுக்குப் பாதிப்பில்லை: தற்போதைய வர்த்தகர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.


எமது பிரதேச சபையின் வருமானத்தைப் பெருக்கி, ஊரின் உட்கட்டமைப்புச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் மேலான சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறேன். 


எமது ஊரின் வளர்ச்சிக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.


நன்றி!

வஸ்ஸலாம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe