அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் சாதாரண பொதுமக்கள் அன்றாட வாழ்வை நகர்த்தவே பெரிதும் சிரமப்பட்டு வரும் நிலையில், சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ள இந்த நிறுவை மோசடி சம்பவம் நுகர்வோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கட்டுப்படியாகாத விலைக்கு இறைச்சியை வாங்கி உண்ண வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், அளவீட்டிலும் கைவரிசை காட்டுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி தற்போது வலுத்துள்ளது.
சம்மாந்துறையில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் இடம்பெற்ற இச்சம்பவம், உள்ளூர் வியாபாரிகளின் வெளிப்படைத்தன்மையற்ற போக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஒரு கிலோ இறைச்சியை 3000 ரூபாய்க்கு வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், வீட்டில் வந்து நிறுத்துப் பார்த்தபோது வெறும் 885 கிராமே இருந்துள்ளது. சந்தேகமடைந்து வீட்டிலிருந்த இரு வேறு தராசுகளிலும், அருகில் இருந்த பழக்கடையிலும் பரிசோதித்தபோதும் அதே 885 கிராமே எடையாகக் காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிலோ 2,600 ரூபாய் என்பதே பாவனையாளர்களுக்கு எட்டாக்கனியாகவும் பெருஞ் சுமையாகவும் இருக்கும் போது, இதுபோன்ற எடைக் குறைப்பு மோசடிகள் மக்களின் வயிற்றிலடிக்கும் செயலாகும். பாரம்பரிய மரபுவழித் தராசுகளைப் பயன்படுத்தி, எடையில் தந்திரமாக முறைகேடு செய்வதை வியாபாரிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனரோ என்ற நியாயமான சந்தேகம் இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவ்வாறான நுகர்வோர் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் உடனடியாக குரல் கொடுத்துள்ளமை பாராட்டுக்குரியது. இச்சம்பவம் தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை, அளவைகள் நிறுவைகள் திணைக்களம் மற்றும் பிரதேசசபை தலைவர் ஆகியோருக்கு முறையான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன், துரித நடவடிக்கைகளும் கோரப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இவ்வாறான எடைக் குறைப்பு மோசடிகளை முற்றாகத் தடுப்பதற்கு, அனைத்து இறைச்சிக் கடைகளிலும் தொங்கவிடப்படும் பாரம்பரிய தராசுகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, துல்லியமான எடையைக் காட்டும் மின்சாரத் தராசுகளை (Digital Scales) கட்டாயமாகப் பொருத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு, இத்தகைய சுரண்டல்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
தகவல் - Ukrasool KL Abdul Thasool
செய்தி வடிவம் - சம்மாந்துறை அன்சார்.

