Ads Area

சம்மாந்துறைப் பிரதேச மக்களின் சுகாதாரத்தேவைகள் தீர்க்கப்பட வேண்டும் - தவிசாளர் மாஹிர் கோரிக்கை

 றியாஸ் ஆதம்.

 

சம்மாந்துறை பிரதேச மக்களின் சுகாதாரத்தேவைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாகத்தீர்க்குமாறு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று (01) கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத்தெரிவிக்கையிலே தவிசாளர் மாஹிர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,


அவர் மேலும் குறிப்பிடுகையில், 


சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட வருவோர் ஒரு சமயத்தில் ஒருவர் மாத்திரம் உள்ளே அனுமதிக்கப்படுவதால், ஏனையோர் வீதியோரங்களில் நின்று சிரமப்படுகின்றனர். 


இதனைத்தவிர்க்குமுகமாக, ஒரு நோயாளருக்கு இரண்டு அனுமதி அட்டைகள் (Pass) வழங்குவதுடன், ஒரே நேரத்தில் இருவர் பார்வையிடச்சந்தர்ப்பமளிக்க வேண்டும். 


மேலும், பார்வையாளர்களின் நலன்கருதி வைத்தியசாலை வளாகத்திற்குள்ளேயே காத்திருப்புப் பகுதியொன்றினையும் ஏற்படுத்த வேண்டும். இவற்றினைச் செய்கின்ற போது வைத்தியசாலையின் நுழைவாயில் பிரதான வீதியில் ஏற்படுகின்ற நெரிசலினை குறைக்க முடியும்.


அத்துடன், சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள கிளினிக் நிலையங்களில் சேவைகளைப்பெறுவதற்காக வருகை தரும் தாய்மார்கள் உட்கார்ந்து தாமதித்து சேவையினை பெறுவதற்குரிய வசதிகள் போதாமையினால் கிளினிக் வருகின்றவர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். 


எனவே, அவர்களின் நலன்கருதியும் காத்திருப்புப் பகுதி உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். அத்துடன், செந்நெல் கிராமம் மற்றும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.


மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி பிராந்திய மக்களின் சுகாதாரத்தேவைகளை அறிந்து சேவையாற்றுவதற்கு பிராந்திய பணிப்பாளர் முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. இதுவொரு முன்மாதிரியான செயற்பாடாகும் என்றார்.


குறித்த பிரச்சினைகளை கவனத்திற்கொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவற்றினைப்பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். 


இச்சந்திப்பின் போது சம்மாந்துறை பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் உட்பட பிரதேசத்தின் பொதுச்சுகாதாரம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe