மஜீட். ARM,
முஹம்மது அஸ்றீன்
"Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணியாக முன்னெடுக்கப்பட்ட "அத்தம" தேசிய தூய்மைத் தின வேலைத்திட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்கான ஆரம்ப நிகழ்வு, செந்நெல் கிராமத்தில் மிகவும் வெற்றிகரமாக இன்று (08) திகதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி, உழைப்பால் அனைவரும் சமம் என்ற சமத்துவச் சிந்தனையை உருவாக்குவதே 'அத்தம' வின் இலக்காகும். "க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்பது அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் என்றால், ‘அத்தம’ என்பது அத்திட்டத்தை மக்களின் இதயங்களுக்குக் கொண்டு சேர்த்து வெற்றியாக்குவதற்கான சமூகத் தத்துவமாகும்.
இலங்கையின் பாரம்பரிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் "அத்தம" என்பது இலாப நோக்கற்ற, கூட்டு உழைப்புப் பரிமாற்ற முறையைக் குறிக்கிறது. கிராமப் புறங்களில், குறிப்பாக விவசாய சமூகங்களிடையே நிலவும் இந்உன்னத வழக்கத்தின் படி, பணப் பரிமாற்றம் இல்லாமல் ஒருவருக்கொருவர் உடல் உழைப்பைத் தங்களுக்குள் சமமாகப் பகிர்ந்துகொள்வது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
சம்மாந்துறை செந்நெல் சாஹிரா வித்யாலயத்தில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் பங்களிப்புடன் உத்தியோகபூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் வி. வாசித் அஹமட், சமுர்த்தி தலைமை பீட முகாமைப்பாளர் எம்பிஎம். ஹுசைன், சென்னல் கிராம அலுவலகத்தின் பிரிவுக்கான பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அப்பிரிவிற்கு பொறுப்பான சிவில் பாதுகாப்பு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், செந்நெல் சாஹிரா பாடசாலை அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், செந்நெல் கிராமத்தின் நான்கு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள், அஸ்வசும உதவிபெறும் மற்றும் பெறாத அனைத்துப் பொதுமக்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டு கிராமத்தின் அபிவிருத்திப் பணியில் பங்காளிகளாக மாறினர்.
இத்தினத்தில் கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிரமதானப் பணிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகள் மரக்கன்று நடுதல் நிகழ்வு, வீதி புனரமைப்பு நிகழ்வு என்பனவும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் பிரஜா சக்தி உறுப்பினர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் செந்நெல் கிராமம் 01 CDC அமைப்பு ஆகியவை இணைந்து இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தன.
சுத்தமான சூழல் – ஆரோக்கியமான சமூகம் – அழகிய இலங்கை!

