Ads Area

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.

தில்சாத் பர்வீஸ்


சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில், கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் இன்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டன.


தொய்யம் வட்டை அமைப்பின் தலைவர் மற்றும் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்வாவா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.


கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் பைனன் ஆற்றுக்கட்டு மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பெருமளவில் சேதமடைந்திருந்தன. இதனால் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.


இந்நிலையில், குறித்த ஆற்றுக்கட்டினை மீளமைத்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கினால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் சுமார் 14.96 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.


இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகளை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும், இதன் மூலம் அப்பகுதி விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.


மேலும், விவசாயிகளின் நீண்டகால தேவைகளை கருத்திற்கொண்டு நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஆர். வேல்கஜன், கல்முனை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ஏ.எம்.எம். ஹக்கீம், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வை. நவாஸ், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe