Ads Area

மக்கள் சந்திப்பில் றிஸ்விகான்: பிரதேச சபையின் 15வது கூட்டத் தொடருக்கு முன் மக்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடல்!

சம்மாந்துறை அன்சார்.


சம்மாந்துறை வீரமுனை வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் அவர்கள், தனது வட்டார மக்களின் தேவைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீர்த்து வைக்கும் நோக்கில் முன்னெடுத்து வரும் மாதாந்த மக்கள் சந்திப்புத் திட்டம் பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



தேர்தல் காலங்களில் தனது வெற்றிக்காக அயராது உழைத்த வட்டாரப் பிரதேச மக்களை ஒவ்வொரு மாதமும் ஒன்றிணைத்து, வட்டாரத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள், எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கும் உத்திகள் குறித்துக் கலந்தாலோசிக்கும் விசேட வேலைத்திட்டத்தை அவர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்.


இதன் ஒரு கட்டமாக,  சம்மாந்துறை பிரதேச சபையின்  15 ஆவது சபை அமர்வுக்கு முன்னதாக, தனக்கு வாக்களித்த வட்டார மக்களுடனான விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்றை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வு நேற்று 2026-09-06 ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ றிஸ்விகான் அவர்கள், தான் சார்ந்திருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய எதிர்கால அரசியல் வெற்றிக்காகவும், அதன் பலமிக்க வளர்ச்சிக்காகவும் அடிமட்டத் தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியதன் அவசியம் குறித்துப் பூரண தெளிவூட்டல்களை வழங்கினார்.


"மக்களுக்கான சேவையைத் தடையின்றி வழங்குவதற்கும், எமது பிரதேசத்தின் குரலை ஓங்கி ஒலிப்பதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பலம் இன்றியமையாததாகும்" என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வில், கலந்து கொண்ட பொதுமக்களினால் கட்சியின் பணிகள், தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் வீரமுனை வட்டாரத்தின் உட்கட்டமைப்புத் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. மக்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் அவர்களினால் மிகத் தெளிவான விளக்கங்களும், உரிய தீர்வுகளுக்கான வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன.


இக்கூட்டத்தின் நிறைவில், பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் அவர்களின் சுறுசுறுப்பான மக்கள் பணிகளையும், வெளிப்படைத்தன்மையான அரசியல் அணுகுமுறையையும் பாராட்டிய பொதுமக்கள், அவருக்குத் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காகவும், றிஸ்விகான் அவர்களின் அரசியல் பணிகளுக்குப் பக்கபலமாக இருப்பதற்காகவும் தாம் என்றும் இணைந்து பயணிக்கத் தயாராக இருப்பதாக வட்டார மக்கள் ஒருமித்த குரலில் உறுதியளித்தனர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe