Ads Area

மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவை சிறைச்சாலையில் சந்தித்தார் சவூதி இலங்கைக்கான தூதுவர்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி தம்மாம் மத்திய சிறைச்சாலையில் சந்தித்து, அவரது நலன் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.


இது தொடர்பாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தம்மாம் மத்திய சிறைச்சாலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


27 வயதுடைய அனோஜன் சிவராசா, சவூதி அரேபியாவில் தொழில்புரிந்து வந்த இலங்கையர் ஆவார். சமூக ஊடகத்தில் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக் கருதப்பட்ட கருத்தொன்றைப் பதிவிட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். குறித்த பதிவை அடிப்படையாகக் கொண்டு தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


சிறைச்சாலையில் அனோஜன் சிவராசாவைச் சந்தித்த தூதுவர் அமீர் அஜ்வாத், அவருடன் கலந்துரையாடி, அவரது தேவைகள் மற்றும் கவலைகளைக் கேட்டறிந்துள்ளார். இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அவருக்குத் தேவையான தூதரக மற்றும் சட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு இலங்கைத் தூதரகம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், அனோஜன் சிவராசா தூதரகத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு வசதியாக, தூதுவர் தனது தொடர்பு விபரங்களையும் அவரிடம் வழங்கியுள்ளார்.


சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த தூதுவர், அனோஜன் சிவராசா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவரது நலனில் சவூதி சிறைச்சாலை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது, தம்மாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலையின் மருத்துவ அதிகாரி ஆகியோரையும் தூதுவர் சந்தித்துள்ளார். அனோஜனைச் சந்திப்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கும், அவருக்குத் தேவையான பராமரிப்புகளை வழங்கி வருவதற்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.


அத்துடன், அனோஜன் சிவராசாவுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் மேன்முறையீட்டு நடவடிக்கைகளுக்கும் இலங்கைத் தூதரகம் உதவி வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி மூலம் - (Newswire)

தமிழில் - சம்மாந்துறை24




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe