Ads Area

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி: MOH அலுவலகம் அவசர எச்சரிக்கை!

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவில் இந்த ஆண்டு இதுவரை 21 டெங்கு நோயாளர்கள் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பருவமழை காலத்தை முன்னிட்டு மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.


இம்மாதம் முதல் இப்பகுதியில் பருவமழை ஆரம்பமாகவுள்ளதால் டெங்கு நோய்க்காரணிப் பரவல் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, டெங்குப் பெருந்தொற்றிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் அனைவரும் இப்போதிருந்தே தீவிர முன்ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


மேலும் பொதுமக்கள் வாரம் ஒருமுறை தமது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் பரிசோதித்து, முழுமையாகச் சுத்தப்படுத்த வேண்டும்,நீர் தேங்கும் இடங்களை அகற்றல்: டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய டயர்கள், தேங்காய்ச் சிரட்டைகள், உடைந்த பாத்திரங்கள் மற்றும் பயன்பாடற்ற கழிவுப் பொருட்களை உடனடியாகக் கண்டறிந்து அகற்ற வேண்டும். மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன்னரே வீடுகளின் கூரைகள், பீலிகள் மற்றும் நீர் தேங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள அனைத்து இடங்களையும் துப்புரவு செய்ய வேண்டும்.


"நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வோம் — டெங்குவைத் தடுப்போம்!" எனும் நோக்கில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே சம்மாந்துறைப் பிரதேசத்தை டெங்கு அச்சுறுத்தலிலிருந்து முழுமையாகப் பாதுகாக்க முடியும் எனச் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe