கிழக்கிலங்கையில் சிறப்புடன் விளங்கும் வரலாற்றுப் பெருமை கொண்ட பழம் பெரும் நகரங்களில் முக்கிய இடத்தை சம்மாந்துறை வகிக்கின்றது. அதற்கு அதன் அமைவிடமும் புவியியல் நிலைமைகளும் நெல் வயல்களைக் கொண்ட சுர்ர்று சூழலும் அடிப்படையாக அமைகின்றன. G.சின்னத்தம்பி என்பவரின் “Ceylon in Ptolemy’s Geography “ எனும் புத்தகத்தில் சம்மாந்துர்ரையினைப் பற்றி பின்வருமாறு கூறப்படுகின்றது. இலங்கையின் மிகப் பழமையான நெல் வயல்கள் கிழக்குப்பிரதேசத்தில் அமைந்திருந்தன. மகா வம்சத்தில் பராக்கிரமபாகு வெளிநாடுகளுக்கு நெல்லை ஏற்றுமதி செய்ததாகக் கூறப்படுகின்றது.
அக்காலத்தில் கிழக்கில் அதிக நெல் உற்பத்தி இடம்பெற்றிருக்கின்றது என்றும் அவ்வாறாயின் அவ் உற்பத்தி சம்மாந்துறையிலேதான் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும், இவ்விடயம் ஏற்றுக்கொள்ளப்படக் கால்கோளாக எகிப்திய புவியியல் ஆய்வாளரான “தொலமி” இலங்கைப்படத்தில் குறிப்பிடும்“Magnus, Lidusis” எனும் இடம் சம்மாந்துறையாகவே இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. இக்கூற்றிலிருந்து சம்மாந்துறை பண்டைக்காலம் முதல் ஒரு துறைமுகமாக இருந்துள்ளதையும் நெல் உற்பத்தி, அரிசி ஏற்றுமதியுடன் நேரடித் தொடர்புடைய விவசாயப் பொருளாதார பின்னணியைக் கொண்ட பிரதேசமாக இருந்துள்ளதையும் அவதானிக்கலாம். பொதுவாக நோக்குமிடத்து பண்டைக்காலம் முதல் சம்மாந்துறை விவசாய பொருளாதார அமைப்பையும் அத்துடன் கைத்தொழில் நடவடிக்கைகள் வர்த்தக முயற்சிகள் அரச வேலைவாய்ப்புக்கள் என வளர்ச்சியடைய புவியியல், வரலாற்றுக் காரணிகள், கலாசார அம்சங்கள், அரசியல் பின்னணி என்பன சாதகமாக அமைந்ததை இங்கு குறிப்பிட முடியும். எமது பிரதேசத்தின் துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கேற்முதலியார் MS.காரியப்பர் அவர்களின் தூண்டுதலினால் நம் நாட்டின் முதல் பிரதமரும், தேச பிதாவும் சுதந்திரப் போராளியுமான கௌரவ முன்னாள் பிரதமர் DS.சேனநாயக்கா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சேனநாயக்கா சமுத்திரம் நிர்மாணிக்கப்பட்டதும், அதனுடன் இணைந்தவாறு கல்லோயா அபிவிருத்தி சபை (GODB) இயங்க ஆரம்பித்ததும் முக்கிய காரணியாக அமைந்தது. சம்மாந்துறை எனும் பெயர் வரக்காரணமாகவிருந்த விடயம் பற்றி ஆராயும் போது பண்டைக்காலம் தொட்டே “துறை” அதாவது பொருட்களை ஏற்றி இறக்கும் துறையாகவும், ஓடங்களைக் கட்டுகினற துறையாகவும் எமது ஊர் இருந்து வந்ததாகவும் அவ்வாறு பாவிக்கப்பட்ட ஓடங்களை அக்காலத்தில் சம்பத் என்று அழைத்திருக்கின்றார்கள். சம்பத் கட்டப்பட்டிருந்த துறை இவ்வூரில் இருந்ததன் காரணமாக சம்பத்துறை என அழைக்கப்பட்ட இவ்வூர் நாளடைவில் சம்மாந்துறை என பெயர் நாமம் பெற்றதாக முதியோர்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
\ மேலும் கிழக்கிற்கும் கண்டிக்கும் உரிய வர்த்தக மையமாகவும், மட்டக்களப்பிற்கு எல்லையாகவும், சம்மாந்துறை இருந்து வந்ததன் காரணமாகவும், இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபார நோக்கோடு வங்காள விரிகுடாவிலிருந்து மட்டக்களப்பு வாவியினூடாக சம்மாந்துறையை வந்தடைந்த வரலாறுகள் பல ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு வியாபார நோக்கோடு வந்த முஸ்லிம் வர்த்தகர்களான சம்மான்கதாரர் என அழைக்கப்பட்டதாகவும் அவர்கள் இத்துறையினூடாக பொருட்களை ஏற்றி, இறக்கி சென்றதால் சம்மான்கதாரர் துறை என்று அழைத்து, பின் அத்துறை சம்மாந்துறை என அழைக்கப்பட்டதாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.