Ads Area

சம்மாந்துறை கல்லரிச்சல் பூங்கா விவகாரம் : அரசியல் கெடுபிடியா? அல்லது சட்டத்தின் பின்னணியா?


அபிவிருத்திகளை கொண்டுவருவது கடினம் தடுப்பது இலகு’ இவ்வாறு பலரும் பல விதங்களில் சில காலமாக விமர்சனங்களை விலாசிக் கொண்டிருக்கின்றனர். 

சம்மாந்துறையைப் பொறுத்தவரையில் இது ஒரு பாரிய ஊர் என்பதனால் அபிவிருத்தியின் பாணியில் தற்காலத்திற்கு முன்பிருந்த அரசியல் தலைமைகளை ஒப்பீட்டளவில் நோக்கும் போது தாக்குதிறன் தற்போதைய தலைமைகளின் செயற்றிறன் குறைவாகவே உள்ளது.


இப்படியான கெடுபிடியில் எமது ஊரின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒருவித வரட்சியை எதிர்கொண்டாலும் சிலர் தங்களால் முடிந்தளவான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் மறுக்கமுடியாத ஒன்றாகும். இது ஒருபுறமிருக்க தற்போதைய நடைமுறை விமர்சனமாக சமூகவலைத்தளங்களில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் விடயமொன்றை இங்கு நோக்குவோம்.

அதாவது, சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட கல்லரிச்சல் பிரதேசத்துக்கான சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது ஸ்தம்பிதம்பிதப்படுத்தப்பட்டுளளதாகவும் அந்த பூங்காவை வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

அறியாமையின் உளரலில் இன்று அரசியல் சாக்கடையாக்கப்பட்டு தரம்கெட்டு திசைதப்பி திரியுமளவுக்கு தன்மானத்தை இழந்துவிட்டது என்பது யாவரும் அறிந்த உண்மை. சில விடயங்களை கட்டாயமாக நாம் அறிபூர்வமாகவும் யதார்த்தத்துடனும் தூரநோக்குடனும் சிந்திக்க வேண்டியது பகுத்தறிவுள்ள நம் அனைவரினதும் தலையாய கடமையாகும்.

சம்மாந்துறையின் சரித்திரத்தில் உரித்தாகும் பழம்பெரும் இடங்களில் ஒன்றுதான் ‘பயினன்டாறு’ என வர்ணிக்கப்படும் அந்த ஆற்றங்கரைப் பகுதி அந்த பிரதேசம் கல்லரிச்சல் பிரதேசம் என அழைக்கப்படும். அப்பிரதேசத்தில் இருக்கின்ற மக்களும், அதனை அண்டிய பகுதியில் இருக்கின்ற மக்களும் மாலை நேரங்களில் பொழுது போக்குக்காக சுமார் 2.5 கி.மீ. பயணம் செய்து அமீர்அலி பொது நூலக வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவர் பூங்காவுக்கு செல்கின்றனர். இது ஒரு சிரமமான விடயம் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரிதாக காணப்படும் சம்மாந்துறையில் சிறிய அளவிலமைந்த ஒரு பூங்கா போதாது. பல வசதிகளுடனும் பரந்த நிலப்பரப்பில் அவை இருக்கவேண்டும்.

இப்படியான ஒரு நிலைமையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினால் கல்லரிச்சல் பிரதேசத்துக்கு ஒரு சிறுவர் பூங்கா அமைப்பதற்காக சுமார் 9.6 மில்லியன் ரூபா நிதி கடந்த வருடம் கொண்டுவரப்பட்டு தற்போது வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதன் அமைப்பை உற்றுநோக்கினால் அந்த ஆற்றுக்கு செல்லும் வழியில் வயல் வெளிகள், செங்கல் வாடிகள், சிறுசிறு வீடுகள் என அழகிய சூழலின் நிடுவில் அமையப்பெறும் அளவில் இரு மருங்கிலும் கொங்கிரீட் இடப்பட்ட வீதியின் நடுவே புற்பூண்டுகளுடன் செப்பணிடப்பட்டு கம்பி வலைகள் பொருத்தப்பட்ட ஓர் அளகான சிறுவர் பூங்கா… ஆகா! உண்மையிலே இது எமது மண்ணுக்கும் அந்தப் பிரதேச மக்களுக்கும் கிடைத்த வரமென்றுதான் கூறவேண்டும்.

சொல்லுமபோதே இவ்வளவு இனிமையாக இருக்கும் இந்த அமைவிடப்பூங்கா அமையப்பெறுவதை மனிதத்துவத்துடன் சிந்தித்தால் யாரும் தடுப்பார்களா? தற்போது உலா வருகின்ற ஒரு செய்தி இந்த பூங்காவினை சம்மாந்துறையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் அவர்கள் தடுப்பதாகவும் இதனை இப்பிரதேசம் தவிர்ந்த வேறு இடத்துக்கு நகர்த்த திட்டமிடுவதாகவும் தகவல்கள் கசிகின்ற இக்காலகட்டத்தில், சில தெளிவுகளுக்காக சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு கருத்துக்களை சேகரித்தபோது,

பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது ஊரின் அபிவிருத்தியில் கவனம் செலுத்திய நான், கைகாட்டியை அதனை அண்டிய பகுதிகளுக்கான அபிவிருத்திக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை நகர திட்டமிடல் அமைச்சிலிருந்து எடுத்து வந்துள்ளேன். அவற்றுக்கான வேலைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டு வேலைப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அத்துடன் எனது மிக நீண்டநாள் கனவாக இருந்த விடயம் சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கவேண்டுமென்பது. இதற்காக சுமார் 9.6 மில்லியன் ரூபாவினை நகர திட்டமிடல் அமைச்சினூடாக பெற்று வந்தேன். அது மாத்திரமல்லாது சம்மாந்துறையில் இதனுடன் இணைந்து செந்நெல் கிராமத்தில் ஒரு சிறுவர் பூங்கா அமைத்தல், அமீர் அலி பொது நூலகத்தில் அமைந்துள்ள பூங்காவினை அபிவிருத்தி செய்தல் போன்றவற்றுக்கும் நிதிகளை கொண்டுவந்துள்ளேன்.

இவ்வாறான நிலையிலேயே கல்லரிச்சல் பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டத்துக்கான அனுமதியை பிரதேச சபையிடம் கேட்டபோது அந்த இடத்துக்கான அனுமதியையும், சிறுவர் பூங்காவுக்கான முழு வடிவமைப்பையும் அவர்களே செய்து தந்தனர். அதன் பின்னரே வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த திட்டத்தினை இடைநிறுத்துவதற்கான கட்டளைகள் இடப்பட்டதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அவ்வாறு இடைநிறுத்துதென்றால் அது எவ்வாறு சாத்தியமாகும்? அதியுயர் மின் கம்பி (33000ற) பூங்காவுக்;கு இடையில் செல்வதாக கூறுகின்றனர். இங்கு நான் வினவுவது என்னவென்றால் ‘அனுமதி வழங்கும்போது அந்த மின்கம்பம் இருக்கவில்லையா?’ – என்றார்.

இதே வேளை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,

உண்மையிலே இது அந்தப் பிரதேச மக்களுக்கு அத்தியவசியமானது. அதேநேரம் இவ்வாறு சமூகத்துக்கு நன்மை பயக்கும் திட்டங்களை யார் கொண்டு வந்தாலும் கட்சி, அரசியல் பாகுபாடின்றி நிச்சயம் வரவேற்க வேண்டும். இதனை தடுக்கவேண்டும் என்பதோ அல்லது இதனை வேறு பிரதேசத்துக்கு கொண்டு செல்வது என்பதோ எனது நோக்கமல்ல கல்லரிச்சல் பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்ட சிறுவர் பூங்கா அங்கேதான் அமைக்கப்படல் வேண்டும் நானும் உறுதியாக இருக்கின்றேன்.

இங்கு சபையில் உள்ள அதிகாரிகளிடம் நான் கேட்டது என்னவென்றால் ‘இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் முன்னர் மின்சார சபையிடம், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அனுமதிகள் மற்றும் மதிப்பீடுகள் பெறப்பட்டுள்ளனவா?’ அத்துடன் அதியுயர் மின்சார கம்பி இடைநடுவில் செல்வது பிற்காலத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என மின்சார சபை பொறியியளாளர் என்னிடம் தெரிவித்தார். தற்போது சபை என்னுடைய பொறுப்பிலுள்ள நிலையில் எதிர்கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு சிறப்பாகவும், சுகாதாரமாகவும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அத்தோடு இங்குள்ள உத்தியோகத்தர்களிடம் கேட்டபோது அவர்கள் அனுமதி வழங்கியமைக்கு வாய்மூடி மௌனித்து இருக்கின்றனர். அதனால்தான் அவர்களிடம் கூறியுள்ளேன் இவ் வேலைத்திட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துங்கள். அனுமதி வழங்கியமைக்கு தகுந்த ஆதரங்களையும், ஆவனங்களையும் சமர்ப்பியுங்கள் என்றேன். இது என்னுடைய தனிப்பட்ட காரணத்துக்காக மேற்கொள்ளப்பட்ட விடயம் அல்ல. சமூகத்தின எதிரகால நன்மை கருதியே அவ்வாறு வினவியுள்ளேன். – என்றார்.

இவற்றையெல்லாம் வைத்து நோக்கும் போது இந்த திட்டம் நிச்சயம் இப்பிரதேசத்துக்கு முக்கியத்துவமானது. அதே நேரம் தவிசாளரினால் வினவப்பட்ட சட்ட ஏற்பாடுகளும் ஏற்புடையதே. இருந்தபோதிலும் ஒரு விடயத்தை நோக்கினோமானால் அபிவிருத்தியை கொண்டுவந்தவரும் அரசியல் பிரமுகர், தடுப்பதாக விமர்சிக்கப்படுபவரும் அரசியல் பிரமுகர் இருவரின் கருத்துக்களும் உடன்பாட்டு ரீதியில் ஏற்புடையதாகவே இருக்கின்றது. இடையில் உள்ள உத்தியோகத்தகர்கள், அந்த நேரம் இருந்த சபையின் செயலாளர் உட்பட இத்திட்டத்துக்கு அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளனர்.

திட்டத்தை மட்டும் உற்றுநோக்கிய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் சட்டத்தை மறந்தமை, இன்று அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுப்பது போல் அரசியல் தூரநோக்குகளாக திரிபடைந்து விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

எனவே, இது எமது பிரதேசத்துக்கு இன்றியாமையாத சிறப்பான செயற்திட்டம் இப் பூங்கா இவ்விடத்தில் இடம்பெறுவதை அப்பிரதேச மக்களும் வரவேற்பதோடு பெரும் எதிர்பார்ப்போடும் இருக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அத்துடன் இதனை நிச்சயம் கருத்தில் இத்திட்டம் முழுமை பெற கௌரவ தவிசாளர் பூரண ஒத்துழைப்பையும் அனுமதியையும் தகுந்த சட்ட ஏற்பாடுகளுடன் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-கியாஸ் ஏ. புஹாரி-
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe