மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை கல்லரிச்சல் பிரதேசத்தில் உள்ள சில இடங்களில் மாட்டுக் கழிவுகளையும், ஏனைய கழிவுகளையும் சில மாட்டுப் புத்தியுள்ளோர் போட்டு அப்பிரதேசத்தை அசுத்தப்படுத்தி துர்நாற்றம் வீச வைப்பதாக கல்லரிச்சல் பிரதேச இளைஞர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றார்கள்.
வீதி ஓரங்களில் இவ்வாறான கழிவுகளை கொட்டுவதனால் பாடசாலை மாணவர்கள், அன்றாடம் தொழிலுக்குச் செல்லும் (ஆண்கள், பெண்கள்) என அனைவரும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் இப்பாதையால் செல்ல வேண்டிய நிலையில் உள்ளதாகவும் மேலும் அந்த மாட்டுக் கழிவுகளைக் கொட்டும் இடத்தில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் சில மாணவர்களை நாய்கள் கடித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறுகின்றார்கள்
சம்மாந்துறை பிரதேச சபையினால் “இப் பகுதியில் குப்பைகளைக் கொட்டாதீர்கள்” என பதாதைகள் வைக்கப்பட்டும் அதனை ஒரு பொருட்டாக மதிக்காது சில மாட்டுப் புத்தியுள்ளோர் மாட்டுக் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
குப்பைகள் கொட்டப்பட்டு வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்ததினை உணர்ந்த சம்மாந்துறை கல்லரிச்சல் பிரதேச இளைஞர்கள் பலர் தாமாக முன் வந்து அக் குப்பைகளை அகற்றி சிரமதான பணியில் அண்மையில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சுற்றாடல் பொலிஸார் குப்பைகளை வீசிச் செல்வோர் தொடர்பில் காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என அப்பிரதேச இளைஞர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.